மாஸ்கோ: ரஷ்ய விஞ்ஞானிகளுக்கு அதிரடி உத்தரவு… என்றும் இளமையுடன் இருப்பதற்கு மருந்தை கண்டுபிடிக்குமாறு ரஷ்ய விஞ்ஞானிகளுக்கு புடின் அரசு உத்தரவிட்டு உள்ளது. கடந்த ஜூன் மாதம் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவு தற்போது வெளிச்சத்திற்கு வந்து உள்ளது.
இது தொடர்பாக ஆராய்ச்சியாளர்களுக்கு அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: ரஷ்ய குடிமக்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான திட்டங்களை விஞ்ஞானிகளும், டாக்டர்களும் சமர்ப்பிக்க வேண்டும்.
இளமையுடன் வாழ்வதற்கான சிசிச்சை முறைக்கான ஆய்வுகளை விரைவுபடுத்த வேண்டும். இதன் மூலம் 2030 ம் ஆண்டிற்குள் 1,75,000 பேரின் வாழ்க்கை பாதுகாக்கப்படும். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
இத்துடன் *உடலிலுள்ள செல்கள் அழிவதை குறைத்தல், அறிவாற்றல் வீழ்ச்சி மற்றும் உணர்ச்சி குறைபாட்டை தடுக்க புதுமையான தொழில்நுட்பங்கள், *நோய் எதிர்ப்பு மண்டலத்தை மாற்றி அமைத்தல் மற்றும் சரி செய்வதற்கான முறைகள் குறித்து ஆய்வு செய்து அதற்கான வழிமுறைகளை சமர்ப்பிக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
இந்த உத்தரவு அந்நாட்டு விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களை அதிர்ச்சி அடைய வைத்து உள்ளது. பணிகளை முடிவு செய்ய குறைந்தளவே காலக்கெடு வழங்கப்பட்டு உள்ளதால், என்ன செய்வது என தெரியாமல் விஞ்ஞானிகள் திணறி வருகின்றனர்.
அதேநேரத்தில், இந்த திட்டத்திற்கு ஆகும் செலவும் திகைப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கான மருந்தை உருவாக்க பல பில்லியன்கள் செலவாகும் என கணக்கிடப்பட்டு உள்ளது. அதேநேரத்தில் புடினுக்கு நெருக்கமானவரும், அணு ஆராய்ச்சியில் கவனம் செலுத்தி வருபவருமான மிக்கையில் கோவல்சுக் இந்த திட்டத்தை ஊக்கப்படுத்தி வருகிறார்.