வாஷிங்டன்: காலிஸ்தான் பிரிவினைவாதிகள் விவகாரத்தில் இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மீது கனடாவின் குற்றச்சாட்டு கவலை அளிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப்சிங் நிஜ்ஜார் 2023-ம் ஆண்டு வட அமெரிக்க நாடான கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்டார். இதில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியிருந்தார். இதை மத்திய அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது
இதனால் இரு தரப்பு உறவுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அமெரிக்காவில் இருந்து வெளிவரும் வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ் நிஜ்ஜார் கொலை வழக்கு தொடர்பாக தொடர்ந்து கட்டுரைகளை வெளியிட்டு வருகிறது.
இது குறித்து சமீபத்தில் பேசிய கனடா வெளியுறவுத்துறை இணை அமைச்சர் டேவிட் மாரிசன், கனடாவில் சீக்கிய பிரிவினைவாதிகளுக்கு எதிராக இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வன்முறையை தூண்ட திட்டமிட்டு வருவதாக கூறினார்.
இதுகுறித்து வாஷிங்டன் போஸ்ட் செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதை நான் உறுதி செய்தேன் என்றார். இந்நிலையில், அமித் ஷா மீதான கனடாவின் புகார் கவலை அளிப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் நேற்று தெரிவித்தார். இது தொடர்பாக கனேடிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்படும் என்றார்.