இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதித்திருப்பது, இருநாட்டு வர்த்தக உறவுகளில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிபர் டிரம்ப் இந்த வரிகளை இந்தியா-ரஷ்யா எண்ணெய் ஒப்பந்தத்துக்கு எதிராக எடுத்த நடவடிக்கையாக அறிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து இந்தியாவில் இருந்து அமெரிக்கா இறக்குமதி செய்யும் பொருட்களின் விலை உயரவுள்ளது. இதனால் விற்பனை குறையும் என்ற அச்சத்தால் அமெரிக்காவின் முக்கிய வணிக நிறுவனங்கள் நடவடிக்கைகளில் மாற்றம் கொண்டுள்ளன.

வால்மார்ட், அமேசான், டார்கெட், கேப் உள்ளிட்ட அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவிலிருந்து தற்காலிகமாக இறக்குமதி செயலை நிறுத்த முடிவெடுத்துள்ளன. இந்திய நிறுவனங்களுக்கு அனுப்பிய தகவல்களில், அதிக வரியை ஏற்றுக்கொள்வது அவசியம் எனவும், இல்லையெனில் ஒப்பந்தங்கள் நிறைவேறாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்திய நிறுவனங்கள் வரி சுமையை பொறுத்து, ஏற்றுமதிகளை குறைக்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றன. சில நிறுவனங்கள் ஏற்கனவே அமெரிக்கா நோக்கி வரும் ஆர்டர்களை 40 முதல் 50 சதவீதம் வரை குறைத்துவிட்டதாகத் தெரிகிறது.
இது குறிப்பாக துணி மற்றும் ஆடை ஏற்றுமதித் துறையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இந்தியா 2023-24ஆம் ஆண்டு 36.61 பில்லியன் டாலர் மதிப்பிலான துணி, ஆடைகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை அமெரிக்காவுக்கே ஏற்றுமதி செய்தது. வெல்ஸ்பன், கோகல்டாஸ், இண்டோ கவுண்ட் போன்ற நிறுவனங்கள் முக்கியமாக பாதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. வரி செலவுகள் 30 முதல் 35 சதவீதம் வரை உயரும் என்பதால், இந்த நிறுவனங்களின் லாப விகிதங்கள் குறைய வாய்ப்புள்ளது.
இந்தச் சூழ்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. அமெரிக்காவை சமாளிப்பதற்கான எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அரசு விவசாயிகள் மற்றும் உற்பத்தியாளர்களின் நலனில் எந்தவிதச் சமரசத்தையும் செய்யமாட்டோம் என்ற உறுதியை தெரிவித்துள்ளது. வர்த்தக உறவுகளை மீட்டெடுக்க புதிய தீர்வுகள் அமையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.