அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள டிரம்பை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது மனைவியும் ரிலையன்ஸ் அறக்கட்டளை தலைவருமான நீடா அம்பானி சந்தித்து பேசியது கவனம் பெற்று வருகிறது. டிரம்புடன் அம்பானி ஜோடி எடுத்துக்கொண்ட புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது. அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப், 47-வது அதிபராக வாஷிங்டனில் இன்று பதவியேற்கிறார்.
அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட துணைத் தலைவர் கமலா ஹாரிஸ் தோல்வியடைந்தார். புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் அதிபர் வழக்கமாக ஜனவரி 20-ம் தேதி பதவியேற்பார். அதன்படி, அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்டு டிரம்ப் இன்று வாஷிங்டனில் உள்ள பார்லிமென்ட் கட்டிடமான கேபிடல் கட்டிடத்தில் பதவியேற்கிறார்.
அமெரிக்க அதிபரின் பதவியேற்பு விழாவுக்கு வெளிநாட்டு தலைவர்களை அழைப்பது வழக்கம் அல்ல. ஆனால் இந்த முறை சில வெளிநாட்டு தலைவர்களை டிரம்ப் அழைத்துள்ளார். இதேபோல், பல தொழிலதிபர்களை டிரம்ப் அழைத்துள்ளார். அந்த வகையில் முகேஷ் அம்பானி மற்றும் நீடா அம்பானிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
டிரம்ப் அளித்த விருந்தில் அவர்கள் பங்கேற்றனர். இந்தியா-அமெரிக்க உறவு மேலும் வலுப்பெறும் என நம்பிக்கை தெரிவித்தனர். அமெரிக்க அதிபராக 2-வது முறையாக பதவியேற்றுள்ள டிரம்ப்புக்கு அவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். அவரது பதவிக்காலத்தில் இந்தியா-அமெரிக்கா இடையேயான ஒத்துழைப்பு இரு நாடுகளுக்கும், உலகத்துக்கும் வளர்ச்சியைக் கொண்டுவரும் திறன் கொண்டது என்று அவர்கள் தெரிவித்தனர்.