அமெரிக்கா: வெனிசுலா மீது மீண்டும் வரிவிதித்து அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவின் இந்த அதிரடியால் இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெனிசுலா மீது அமெரிக்கா இரண்டாவது தவணையாக கூடுதல் வரிவிதிப்பை அறிவித்துள்ளது. இருநாடுகள் இடையேயான மோதல் நீண்ட காலமாக நடந்து வரும் சூழலில், அதிகளவில் குற்றவாளிகளையும், போதைப் பொருளையும் அமெரிக்காவிற்கு கடத்த வெனிசுலா உறுதுணையாக இருப்பதாக அதிபர் ட்ரம்ப் குற்றம்சாட்டி வருகிறார். ஏற்கெனவே, வெனிசுலா மீது கூடுதல் வரிகளை அமெரிக்கா விதித்திருந்த நிலையில், தற்போது இரண்டாவது தவணையாக 25 விழுக்காடு கூடுதல் வரியை அறிவித்துள்ளது. வரும் 2ஆம் தேதி முதல் புதிய வரிவிதிப்பு நடைமுறைக்கு வருமென அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது ட்ரூத் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘வெனிசுலா நாடு அமெரிக்காவுக்கு விரோதமாக செயல்பட்டு வருகிறது.
எனவே வெனிசுலாவிடம் இருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு வாங்கும் நாடுகள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் அனைத்து பொருட்களுக்கும் 25 சதவீதம் வரை வரி செலுத்த வேண்டியிருக்கும். இந்த வரிவிதிப்பு முறை ஏப்ரல் 2ஆம் தேதியில் இருந்து அமலுக்கு வரும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
வெனிசுலாவுக்கு எதிராக வரிவிதிப்பு அறிவித்துள்ள போதிலும், அமெரிக்கா தற்போதும் அங்கிருந்து எண்ணெய் இறக்குமதி செய்து வருவது குறிப்பிடத்தக்கது மேலும், வெனிசுலா கச்சா எண்ணெய் மீதான கட்டுப்பாடுகள், உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. இதன்தொடர்ச்சியாக எண்ணெய் விலையும் உயரலாம்.
அதிபர் ட்ரம்பின் புதிய உத்தரவு காரணமாக சீனா, ஸ்பெயின், இந்தியா, ரஷ்யா, சிங்கப்பூர் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை கடந்த ஆண்டு வெனிசுலாவிலிருந்து 2.2 கோடி பீப்பாய்கள் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்துள்ளது.
இது நாட்டின் மொத்த கச்சா எண்ணெய் கொள்முதலில் 1.5 சதவீதம் ஆகும். இந்த நிலையில், வரும் ஏப்ரல் 2-ஆம் தேதி முதல், இந்தியா மீது பரஸ்பர வரி விதிக்கப்படும் என்று ட்ரம்ப் கூறியிருந்த நிலையில், வெனிசுலாவுடன் இந்தியா எண்ணெய் இறக்குமதிகளை தொடர்ந்தால் கூடுதலாக 25 சதவிகித வரி விதிக்கப்படும் அபாயம் உள்ளது.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எடுத்து வரும் அதிரடி நடவடிக்கைகள் இந்தியாவிற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.