காசாவில் நிலவும் சூழல் கடந்த சில ஆண்டுகளில் மேலும் தீவிரமாகியுள்ளது. குறிப்பாக கடந்த மாதங்களில் இஸ்ரேல் தனது தாக்குதல்களை தீவிரமாக்கியது, இதனால் பல பாலஸ்தீனியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் பின்னணி அமெரிக்கா காசாவில் அமைதியை ஏற்படுத்த 21 பாயிண்ட் கொண்ட விரிவான திட்டத்தை முன்மொழிந்துள்ளது. இந்த திட்டம் காசாவை வன்முறை இல்லாத, பாதுகாப்பான, மக்களுக்கு பாதுகாப்பான வாழ்க்கை வழங்கும் ஒரு மண்டலமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த திட்டத்தின் படி, இரு தரப்பும் ஒப்புக்கொண்டால் உடனடியாக மோதல்கள் நிறுத்தப்பட்டு, இஸ்ரேல் படிப்படியாக காசாவிலிருந்து விலகும். இதற்குப் பிறகு உயிருடன் உள்ள மற்றும் இறந்த பணயக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள். அதேவேளை போர் தொடங்கிய பிறகு கைது செய்யப்பட்ட பல நூறு பாலஸ்தீனியர்கள் மற்றும் காசா மக்கள் விடுவிக்கப்படுவார்கள். ஹமாஸ் உறுப்பினர்கள் பொதுமன்னிப்பைப் பெறுவார்கள், விரும்பும் நாடுகளுக்கு பாதுகாப்பான பயண வசதியும் வழங்கப்படும்.
காசாவில் நிவாரணப் பணிகள், உட்கட்டமைப்பு சீரமைப்புகள், வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார முன்னேற்றம் ஆகியவற்றிற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும். உதவிகள் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச அமைப்புகளால் நிர்வகிக்கப்படும். பாலஸ்தீனியர்களை கொண்ட இடைக்கால நிர்வாகம் அமைக்கப்பட்டு, அமெரிக்கா தலைமையில் சர்வதேச குழு இதைக் கண்காணிக்கும். காசா மக்கள் விரும்பும் போது வெளியேறும் அல்லது திரும்ப வரலாம், பாதுகாப்பான சூழலும் வேலைவாய்ப்பும் உருவாக்கப்படும்.
இஸ்ரேல் காசாவை நிரந்தரமாக ஆக்கிரமிக்க மாட்டாது. ஹமாஸ் மற்றும் தீவிரவாத குழுக்கள் மீண்டும் வன்முறைக்கு செல்லாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். அமெரிக்கா மற்றும் சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்பில் பாதுகாப்பு படை காசாவை கண்காணிக்கும். இதனால் இரு தரப்பிற்கும் இடையே பரஸ்பர புரிதல் மற்றும் அமைதி பேச்சுவார்த்தைகள் நடைபெறும். காசா மறுசீரமைப்பிற்குப் பிறகு பாலஸ்தீனிய அரசு உருவாகும் சூழல் உருவாகும்.