ராமநாதபுரம் மாவட்டத்தில் மீனவர்கள் ஏற்கனவே பல சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர். கடல் வளம் குறைவு, இலங்கை கடற்படை பிரச்சினைகள் ஆகியவை அவர்களின் வாழ்வாதாரத்தை பாதித்து வரும் சூழலில், தற்போது அமெரிக்காவின் புதிய வரிவிதிப்பு அவர்களை மேலும் சிக்கலில் தள்ளியுள்ளது.

அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் இறால்களுக்கு முன்பு 2.29% மற்றும் 5.77% வரிகள் மட்டுமே இருந்தன. ஆனால் தற்போது 50% ஆக உயர்த்தப்பட்டதால், கிட்டத்தட்ட 60% வரி சுமை ஏற்பட்டுள்ளது. இதனால் இறால் விலை சரிந்து, ஏற்றுமதியாளர்களும், மீனவர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஏற்கனவே ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், மூக்கையூர் போன்ற பகுதிகளில் பிடிக்கப்படும் இறால் மீன்கள் தூத்துக்குடி வழியாக அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டு வந்தன. இந்நிலையில் இத்தகைய அதிக வரி ஏற்றுமதியை முற்றிலும் சீர்குலைக்கும் அபாயத்தை உருவாக்கியுள்ளது.
ஏற்றுமதியாளர்கள் தெரிவித்ததாவது, இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு செல்லும் இறால் ஏற்றுமதியின் 50% வீழ்ச்சி அடையும் அபாயம் உள்ளது. இதன் விளைவாக மீனவர்கள் கடலுக்குச் சென்று உழைத்தாலும் உரிய விலை கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. வரி உயர்வு காரணமாக, ஏற்றுமதி குறைந்து, உள்ளூர் சந்தையிலும் விலை சரிவை ஏற்படுத்தும் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்நிலையில், மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏற்றுமதியாளர்கள் வலியுறுத்துகின்றனர். இறால் மீன்களுக்கு உரிய ஆதரவுத் திட்டங்கள் மற்றும் விலை நிலைத்தன்மையை உறுதிசெய்யாமல் விட்டால், மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ள ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கிக் கொள்ள நேரிடும்.