லண்டனில் வெளிநாட்டினர் குடியேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட மிகப்பெரிய பேரணியில் சுமார் 1.5 லட்சம் பேர் பங்கேற்றனர். தீவிர வலதுசாரி ஆதரவாளரான டாமி ராபின்சன் தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியில் பங்கேற்றவர்கள், பல இடங்களில் போலீசாருடன் தள்ளுமுள்ளில் ஈடுபட்டனர். இதனால் 25 பேர் கைது செய்யப்பட்டனர்.

‛Unite The Kingdom’ என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த போராட்டத்தில், பாட்டில்கள் உள்ளிட்ட பொருட்களை வீசி வன்முறைகள் நிகழ்ந்தன. கூட்டம் அதிகமாகக் கூடியதால், நகரின் பல சாலைகளில் போக்குவரத்து சீர்குலைந்தது. இந்த நிகழ்வு சமூக வலைதளங்களில் தீவிர சர்ச்சையாக பேசப்பட்டது.
இதற்கிடையில், வீடியோ கான்பரன்ஸ் மூலம் பங்கேற்ற எலான் மஸ்க், இடதுசாரி கட்சிகளை கடுமையாக சாடி, “வன்முறை உங்களை நோக்கி வருகிறது. பிரிட்டன் மெதுவாக அழிந்து கொண்டிருக்கிறது. நீங்கள் போராட வேண்டும் அல்லது உயிரிழக்க வேண்டும். உடனடியாக பார்லிமென்டை கலைத்து தேர்தல் நடத்தப்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.
இந்தப் பேரணி பிரிட்டனின் குடியேற்றக் கொள்கைகள் மீதான அதிருப்தியை வெளிப்படுத்தினாலும், வன்முறைகள் மற்றும் கைது நடவடிக்கைகள் நிலைமையை இன்னும் சிக்கலாக்கியுள்ளன. குடியேற்றம் குறித்த பிரிட்டனின் அரசியல் விவாதம், இந்த நிகழ்வால் மேலும் தீவிரமடைந்துள்ளது.