கோலாலம்பூர்: 10 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன மலேசிய விமானத்தின் மர்மம் இன்னும் விலகாத நிலையில், நவீன தொழில்நுட்பம் பதில் அளிக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. பத்து ஆண்டுகளுக்கு முன், மார்ச் 2014ல், மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, சீனாவின் பெய்ஜிங் நகருக்கு, 227 பயணிகள் மற்றும் 12 பணியாளர்களுடன் சென்று கொண்டிருந்த MH370 விமானம், சில மணி நேரங்களில் காணாமல் போனது.
கட்டுப்பாட்டு மையங்களுடனான அனைத்து தகவல் தொடர்பும் துண்டிக்கப்பட்டது. தீவிர தேடுதல் வேட்டை நடத்தியும் விமானம் இருந்ததற்கான தடயம் எதுவும் கிடைக்கவில்லை. ஆயிரக்கணக்கான கடல் ஆய்வாளர்கள், ஏரோநாட்டிக்கல் இன்ஜினியர்கள், தேடியும் பலனில்லை.
இதையடுத்து 2017ம் ஆண்டு விமானத்தை தேடும் பணி நிறுத்தப்பட்டது. ஆப்பிரிக்கா மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் காணாமல் போன விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எனினும், விமானத்தின் பெரும்பாலான பாகங்கள், கருப்புப் பெட்டிகள் உள்ளிட்டவை இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
பல ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பில் 200 மில்லியன் டாலர்கள் செலவில் சீனா, மலேசியா மற்றும் ஆஸ்திரேலியா அரசுகள் மேற்கொண்ட முயற்சிகள் எந்த பலனையும் தரவில்லை. இதனிடையே, ‘வீக் சிக்னல் ப்ராபகேஷன் ரிப்போர்ட்டர்’ என்ற புதிய தொழில்நுட்பம் விமானம் குறித்த பல கேள்விகளுக்கு பதிலளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலோன் மஸ்க் உறுதி செய்துள்ளார். சில சமூக நெட்டிசன்கள் கூறும் வேற்றுகிரகவாசிகளின் கட்டுக்கதையையும் எலோன் மஸ்க் நிராகரிக்கிறார். இருப்பினும், விமானம் விண்வெளியில் ஒரு கருந்துளைக்குள் மறைந்து போகலாம்; வேற்றுகிரகவாசிகளால் பாதிக்கப்படலாம் என பல்வேறு கருத்துக்கள் தொடர்ந்து முன்வைக்கப்படுகின்றன.
MH370 இன் மர்மம் விமானத் துறைக்கு ஒரு பெரிய சவாலாக உள்ளது. புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி பல வழிகளில் பதில்களைக் கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயத்தையும் இது கொண்டு வந்துள்ளது. தற்போது உலகையே உலுக்கி வரும் செயற்கை நுண்ணறிவு இது போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைய வாய்ப்புள்ளது.
செயற்கை நுண்ணறிவு விமானப் போக்குவரத்தில் குறிப்பாக அதன் பாதுகாப்பில் முக்கியப் பங்கு வகிக்கிறது. AI ஆனது கடந்த காலத் தரவை பகுப்பாய்வு செய்து தோல்விகள் நிகழும் முன் தடுக்க முடியும் என்று வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர்.
AI கருவிகள் திட்டமிடலை மேம்படுத்தலாம் மற்றும் வானிலை மற்றும் நெரிசல் முறைகளை பகுப்பாய்வு செய்யலாம். குவாண்டம் தொழில்நுட்பம் விமானப் பாதுகாப்பில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த வல்லது என்று நிபுணர்கள் மத்தியில் வலுவான வாதங்கள் உள்ளன.
ஜிபிஎஸ் சிக்னல்கள் பொதுவாக விமானப் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் உலகில் பல்வேறு நாடுகளில் நிலவும் மோதல்கள் மற்றும் புவிசார் அரசியல் கருத்து வேறுபாடுகள் காரணமாக ஜிபிஎஸ் சிக்னல்கள் முடக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.
எது எவ்வாறாயினும், மனித வரலாற்றில் தீர்க்கப்படாத மர்மங்களில் ஒன்றாக மாறியுள்ள இந்த சம்பவம் எதிர்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு ஒரு தூண்டுதலை வழங்கியுள்ளது என்பதில் சந்தேகமில்லை. காணாமல் போன விமானத்தை விரைவாகக் கண்டறியவும், பத்தாண்டு கால மர்மத்தைத் தீர்க்கவும் புதிய தொழில்நுட்பங்கள் உதவும் என்பது அவர்களின் நம்பிக்கை.