அபுஜா: மத்திய நைஜீரியாவில் உள்ள கிராமத்தில் ஆயுதக்குழுவினர் நடத்திய தாக்குதலில் 20 பேர் பலியாகி உள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. .
நைஜீரியாவில் சமீபகாலமாக நீர் மற்றும் நிலம் தொடர்பாக, மேய்ச்சல்காரர்களுக்கும், விவசாயிகளுக்கும் மோதல் நீடித்து வருகிறது. இந்நிலையில் ரியோம் கிராமப்பகுதியில் உள்ள தஹோசில் நேற்று அதிகாலையில், ஆயுதக்குழுவினர் உள்ளே புகுந்து தாக்குதல் நடத்தினர். இச்சம்பவத்தில் 20 பேர் கொல்லப்பட்டதாக சட்டமன்ற உறுப்பினர் திவான் கேப்ரியல் கூறினார்.
இது தொடர்பாக உள்ளூர் அதிகாரி சதி ஷூவா கூறியதாவது: சமீப காலமாக உள்ளூர் விவசாயிகள் மோதல் மிகவும் ஆபத்தானதாக மாறி உள்ளது. மேய்ச்சல்காரர்கள் அதிகளவில் ஆயுதங்களை எடுத்துவரும் நிலையில் அதிகாரிகளும், ஆய்வாளர்களும் எச்சரித்துள்ளனர். இவ்வாறு எச்சரித்தும் நேற்று வடக்கு பகுதிகளில் ஆயுதக்குழுவினர் வீடுகளை எரித்தனர். அவர்கள் பாதுகாப்பு படையினருக்கு கட்டுப்படவில்லை. கடந்த மாதம், பெனு மாநிலத்தில் ஆயுதக்குழுவினர் குறைந்தது 150 பேரைக் கொன்றனர்.
ரியோம் கிராமப் பகுதியில் அதிகரித்து வரும் தாக்குதல்கள் ஆபத்தானதாகி, பெரும் அச்சத்தையும் பாதுகாப்பின்மையையும் உருவாக்கியுள்ளன, அவை விரைவில் தீர்க்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.