புதுடெல்லி: சீன எல்லையில் நிலைகொண்டுள்ள நமது படைகள் 2020-ல் நிலை திரும்பிய பிறகே வாபஸ் பெறப்படும் என ராணுவ தளபதி உபேந்திரா திவேதி தெரிவித்துள்ளார். தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த ராணுவ தளபதி உபேந்திரா திவேதி, “தற்போதைய நிலையை 2020 ஏப்ரலுக்கு முன்பு இருந்த நிலைக்கு மாற்ற விரும்புகிறோம்.
அதன்பிறகு, படைகளை அகற்றுவது குறித்து ஆய்வு செய்வோம். ஒருவரை ஒருவர் பார்த்து நம்பிக்கையை வளர்த்து வருகிறோம். ரோந்துப் பணிகள் மேற்கொள்ளப்படும்போது நம்பிக்கையை வளர்ப்பதை நேருக்கு நேர் பார்க்கலாம்,” என்றார்.
முன்னதாக, நேற்று செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இந்தியா-சீனா எல்லையில் ரோந்து ஏற்பாடுகள் குறித்து இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் எட்டப்பட்டதாகக் குறிப்பிட்டார். “இந்தியா-சீனா பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் கடந்த சில வாரங்களாக பரஸ்பரம் தொடர்பில் உள்ளனர்.
இதில், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) பகுதியில் ரோந்துப் பணிகளை மேற்கொள்ள இந்தியா – சீனா இடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் 2020-ல் எழுந்த பிரச்சனைகள் தீரும். இதில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க முயற்சிப்போம்” என்றார் விக்ரம் மிஸ்ரி. ரஷ்யாவில் நடைபெறும் 16-வது பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ள நிலையில், எல்லையில் ரோந்து பணி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பிரிக்ஸ் மாநாட்டின் போது பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.