வாஷிங்டன்: பாகிஸ்தானிலிருந்து பலுசிஸ்தான் மாகாணத்தை பிரித்து தனி நாடாக உருவாக்கக் கோரும் ‘பலுசிஸ்தான் விடுதலை ராணுவம்’ மற்றும் அதன் துணை அமைப்பான மஜீத் பிரிகேடை, சர்வதேச பயங்கரவாத அமைப்புகளாக அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை தெற்காசியாவில் அமெரிக்கா, பாகிஸ்தானை விட இந்தியாவுடன் அதிக நட்பு பேணியது. பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாதிகள் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதால் இது ஏற்பட்டது. எனினும் சமீப காலத்தில் நிலைமைகள் மாறி, பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீரை வெள்ளை மாளிகைக்கு அழைத்து டிரம்ப் தனிப்பட்ட விருந்தளித்தது குறிப்பிடத்தக்கது.
அதனைத் தொடர்ந்து, அமெரிக்க மத்திய படைப் பிரிவு (Centcom) தளபதி மைக்கேல் குரில்லா அழைப்பின் பேரில் அசிம் முனீர் மீண்டும் அமெரிக்கா சென்றார். இந்த சந்திப்புகளின் பின்னணியில், பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கருதப்படுகிறது.
இந்த அறிவிப்பின் மூலம், பாகிஸ்தான் தானும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்படுகிறது என்ற செய்தியை உலகத்திற்கு காட்டிக்கொள்ளும் வாய்ப்பைப் பெறுகிறது. இதேவேளை, பாகிஸ்தான் நீண்ட காலமாக இந்தியா, பலுசிஸ்தான் விடுதலை ராணுவத்திற்கு ஆதரவளிப்பதாக குற்றம் சாட்டி வந்தாலும், எந்த ஆதாரமும் வழங்கப்படவில்லை.
கடந்த மாதம், பஹல்காம் தாக்குதலுக்கு பொறுப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் துணை அமைப்பான ‘தி ரெசிஸ்டன்ஸ் பிரன்ட்’ அமைப்பையும் அமெரிக்கா பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது. இது, அமெரிக்கா தனது தெற்காசிய கொள்கையில் பாகிஸ்தானின் விருப்பங்களையும் கருத்தில் கொள்ளத் தொடங்கியுள்ளது என்பதைக் காட்டுகிறது.
இந்த நடவடிக்கை, காஷ்மீர் பிரச்சினை மற்றும் சிந்து நதி நீர் ஒப்பந்தம் உள்ளிட்ட விவகாரங்களில் பாகிஸ்தான், இந்தியா மீது சர்வதேச அழுத்தத்தை ஏற்படுத்த முயலக்கூடும்.