ஆப்கானிஸ்தானில் இணைய சேவைக்கு கடும் கட்டுப்பாடுகளை தலிபான் அரசு விதித்துள்ளது. ஒழுக்கக்கேடான செயல்களைத் தடுப்பதற்காக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், வீடுகளில் பயன்படுத்தப்பட்டு வந்த வைபை இணைய வசதி முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டு அமெரிக்க படைகள் வெளியேறிய பின் ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றிய தலிபான், அங்கு பல்வேறு தடைகள் மற்றும் கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. பெண்கள் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் பங்குபெறுவதைத் தடை செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் உலகளவில் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளன.
கடந்த 16 ஆம் தேதி முதலில் வடக்கு பால்க் மாகாணத்தில் வைபை இணைய சேவை நிறுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் இந்தத் தடையை நீட்டிப்பதாக தலிபான் அறிவித்துள்ளது. இருப்பினும், மொபைல் போன் வழியாகக் கிடைக்கும் இணைய சேவைகள் தற்போது இயக்கத்தில் தொடர்கின்றன.
ஆப்கானிஸ்தானில் இணைய தடை குறித்து பல்வேறு சர்வதேச அமைப்புகள் கண்டனம் வெளியிட்டு வருகின்றன. தகவல் தொடர்பு சுதந்திரத்தை மறுக்கும் இந்த நடவடிக்கை, அந்நாட்டின் மக்களின் அன்றாட வாழ்க்கைக்கும், கல்விக்கும், தொழிலுக்கும் பெரும் சவாலாக அமைந்துள்ளது.