புதுடில்லி: இந்தியா – சீனா இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தை தொடர்ந்து, கிழக்கு லடாக் பகுதியில் நேருக்கு நேர் மோதலில் ஈடுபட்டு வந்த இரு நாட்டு ராணுவங்களும் பின்வாங்கின. இருபுறமும் இருந்த கூடாரங்கள் அகற்றப்பட்டன.
சீனாவுடன் நீண்ட காலமாக எல்லைப் பிரச்சினை உள்ளது. எல்லைகள் இன்னும் துல்லியமாக வரையறுக்கப்படவில்லை. அதற்கு பதிலாக, LAC எனப்படும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு நிறுவப்பட்டு, இரு நாட்டு ராணுவங்களும் அந்தந்த பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில், 2020ல் கல்வான் பகுதியில் நடந்த மோதலில், 20 இந்திய ராணுவ வீரர்கள் பலியாகினர்.இதனால், இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில், முன் எப்போதும் இல்லாத அளவிற்கு, விரிசல் ஏற்பட்டது. இரு நாட்டு ராணுவங்களும் நேருக்கு நேர் மோதுவதால் எல்லையில் படைகளை குவித்துள்ளனர். நான்கு ஆண்டுகளாக, இரு தரப்பினரும் தீர்வுக்காக பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து இந்தியாவும் சீனாவும் ஒரு உடன்பாட்டுக்கு வந்துள்ளன.
இரு நாட்டு ராணுவங்களும் எந்த பகுதியில் ரோந்து செல்வது என்பது குறித்து ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ராணுவ அதிகாரிகள் முன்னிலையில் ஒப்பந்தம் ஏற்பட்டதைத் தொடர்ந்து ரஷ்யாவின் கசான் நகரில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் சந்தித்து பேசினர். அப்போது, எல்லையில் இருந்து ராணுவ வீரர்களை வாபஸ் பெறும் முடிவுக்கு இரு நாட்டு தலைவர்களும் ஒப்புதல் அளித்தனர்.
அதன்படி, இரு நாட்டு ராணுவங்களும் தங்கள் நிலைகளில் இருந்து பின்வாங்கத் தொடங்கியுள்ளன. சீன இராணுவமும் அப்பகுதியில் தனது வாகனங்களின் எண்ணிக்கையை குறைத்தது, அதே நேரத்தில் இந்திய இராணுவம் சில படைகளை திரும்பப் பெற்றது. எல்லையில் இருந்த கூடாரங்கள் அகற்றப்பட்டன. இதன் காரணமாக இரு நாடுகளுக்கு இடையேயான பதற்றம் குறைந்து இயல்பு நிலை உருவாகியுள்ளது.