அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பல நாடுகளுக்கு கடுமையான வரிகளை விதித்து வருகிறார். இதில் இந்தியா மற்றும் பிரேசிலுக்கு 50 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. சீனாவுக்கு 145 சதவீதம் வரி அறிவிக்கப்பட்டாலும், அதில் 30 சதவீதம் மட்டுமே நடைமுறைக்கு வந்துள்ளது. டிரம்பின் இந்த நடவடிக்கை பல நாடுகளின் அதிருப்தியை தூண்டியுள்ளது.

இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய இரு நாடுகளும் அமெரிக்காவுக்கு முக்கிய ஏற்றுமதி சந்தையாக இருந்து வருகின்றன. இதனால், வர்த்தக பற்றாக்குறையை காரணமாக்கி டிரம்ப் கடுமையான வரிகளை விதித்துள்ளார். அதேசமயம், இந்த இரண்டு நாடுகளும் பிரிக்ஸ் கூட்டமைப்பில் முக்கிய பங்காற்றுகின்றன. உலகளாவிய வர்த்தகத்தில் டாலருக்கு மாற்றாக புதிய கரன்சியை அறிமுகப்படுத்தும் திட்டத்தை பிரிக்ஸ் நாடுகள் முன்வைத்துள்ளன.
இந்த சூழலில், பிரேசில் அதிபர் லூலா செப்டம்பர் 8ஆம் தேதி ஆன்லைனில் பிரிக்ஸ் கூட்டத்தைக் கூட்டியுள்ளார். இதில் டிரம்ப் விதித்த வரிகள் குறித்து விரிவான விவாதம் நடைபெற உள்ளது. மேலும், பிரிக்ஸ் நாடுகளுக்குள் பரஸ்பர வர்த்தகத்தை அதிகரிப்பது குறித்தும் முக்கிய ஆலோசனைகள் இடம்பெறவுள்ளன. இந்தியா சார்பில் பிரதமர் மோடி பங்கேற்காமல், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்கிறார்.
இந்த கூட்டத்தில் பிரிக்ஸ் கரன்சி குறித்தும் விவாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டிரம்பின் வர்த்தக கொள்கைகள் உலக அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்த பிரிக்ஸ் கூட்டம் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. லூலாவின் தலைமையிலான இந்த முடிவு, டிரம்புக்கு நேரடி சவாலாக அமையக்கூடும் என வல்லுநர்கள் மதிப்பிடுகின்றனர்.