லண்டன்: பிரிட்டனில் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன இடையிலான காசா மோதல் தொடங்கியதிலிருந்து, பல்வேறு நகரங்களில் பெரும் ஆர்ப்பாட்டங்கள் நடந்துவருகின்றன. ஆரம்பத்தில் அமைதியானதாக இருந்த போராட்டங்கள், தற்போது பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கின்றன என்று அரசு தெரிவித்துள்ளது.

சில ஆர்ப்பாட்டக்காரர்கள் யூத விரோத கோஷங்களை எழுப்பியதும், ஹமாஸ் போன்ற தடைசெய்யப்பட்ட அமைப்புகளுக்கு ஆதரவாக செயல்பட்டதாக கைது செய்யப்பட்டதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால், பிரிட்டன் அரசு புதிய சட்ட நடவடிக்கைகள் மூலம் இத்தகைய போராட்டங்களை கட்டுப்படுத்த முடிவு செய்துள்ளது.
முன்னதாக “பாலஸ்தீன் ஆக்ஷன்” எனும் அமைப்பினர், இஸ்ரேல் ராணுவத்துடன் தொடர்புடைய நிறுவனங்களை சேதப்படுத்தியதால், அந்த அமைப்பு பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிராக நடைபெற்ற சமீபத்திய போராட்டத்தில், லண்டனில் மட்டும் 500 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதிய விதிமுறையின்படி, ஒரே இடத்தில் மீண்டும் மீண்டும் நடைபெறும் ஆர்ப்பாட்டங்கள் பொதுமக்களின் இயல்பான வாழ்க்கையை பாதிக்கும் வகையில் இருந்தால், போலீசாருக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கும் அதிகாரம் வழங்கப்பட உள்ளது. இதன்மூலம், பிரிட்டன் அரசு தேசிய பாதுகாப்பு மற்றும் சமூக ஒழுங்கை வலுப்படுத்தும் நோக்கில் செயல்படுகிறது.