ஒட்டாவா: ”உலக அரங்கில் முக்கிய சக்தியாக விளங்கும் இந்தியாவுடனான கனடாவின் உறவு, சிக்கலான நிலையில் உள்ளது,” என, கனடா வெளியுறவுத்துறை அமைச்சர் கூறினார். கடந்த ஆண்டு கனடாவில் காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்படுவதற்கு முன்பே, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டியிருந்தார். இதனால் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கனேடிய வெளியுறவு ஆணையத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் டேவிட் மோரிசன் ஆஜராகி கூறியதாவது:கனடாவின் பிராந்திய ஒற்றுமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்பது கனடாவின் கொள்கை தெளிவாக உள்ளது. உலகிலேயே ஒரே ஒரு இந்தியாதான் என்பதில் நாம் தெளிவாக இருக்கிறோம். கனடா உட்பட பல நாடுகளில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் உள்ளனர்.
இந்தியாவும் கனடாவும் பல தசாப்தங்களாக பங்காளிகளாக உள்ளன. உலக அரங்கில் இந்தியா முக்கிய சக்தியாக உள்ளது. அந்த நாட்டின் கொள்கைகளை கனடா கவனத்தில் எடுத்துள்ளது. இரு நாடுகளும் சுதந்திர வர்த்தக உறவை நோக்கிச் செயல்பட்டு வருகின்றன. 2023 செப்டம்பரில் டெல்லியில் ஜி20 உச்சிமாநாடு நடைபெறும் வரை இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் ஏற்ற இறக்கங்கள் இருந்தன. இந்த உறவு தற்போது சிக்கலில் உள்ளது. இதற்கு தீர்வு காண பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.