கனடாவில் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. ஆனால் அதற்கு முன்னதாகவே அவர் ராஜினாமா செய்வார் என கூறப்பட்டதால் இன்று அல்லது இந்த வாரத்தில் பதவி விலகுவதாக அறிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. அவரது அரசை ஆதரித்த புதிய ஜனநாயகக் கட்சி (என்டிபி) தொடர்ந்து ஆதரவளிக்க மறுத்துள்ளது ட்ரூடோவுக்கு நெருக்கடியை அதிகரித்துள்ளது.
ட்ரூடோ ஏற்கனவே சர்வதேச நெருக்கடிகளை சந்தித்து வரும் நிலையில், உள்நாட்டு அரசியலில் அவருக்கு எதிர்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ட்ரூடோவின் லிபரல் கட்சியின் முக்கிய கூட்டாளியான தேசிய ஜனநாயகக் கட்சியின் தலைவரான ஜக்மீத் சிங், ட்ரூடோ மக்களுக்கு சேவை செய்யத் தவறிவிட்டார் என்றும், ஜனவரி 27-ம் தேதி அவரது அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவார் என்றும் கூறியிருந்தார்.
இதேபோல், துணைப் பிரதமரும், நிதி அமைச்சருமான கிறிஸ்டியா ஃப்ரீலாண்ட் கடந்த டிசம்பரில் ட்ரூடோவின் அமைச்சரவையில் இருந்து விலகினார். இதைத் தொடர்ந்து அவர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை அவரது சொந்த லிபரல் கட்சிக்குள் அதிகரிக்கத் தொடங்கியது. இதனையடுத்து இன்று அல்லது இந்த வாரத்தில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவிப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
லிபரல் கட்சி அடுத்த புதன்கிழமை ஒரு முக்கிய கூட்டத்தை கூட்டவுள்ளது. இதில் கட்சி தொடர்பான பல்வேறு முக்கிய முடிவுகள் எட்டப்படும். அந்த கூட்டத்தில், இடைக்கால பிரதமர் யார் என்பது குறித்தும் முடிவு செய்யப்படும். அதன் பிறகு ட்ரூடோ தனது பதவி விலகலை அறிவிப்பார் என்றும் கூறப்படுகிறது.