காத்மாண்டு: நேபாளத்தில் சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து நடந்த போராட்டங்களில் உயிரிழப்புக்கு காரணமானதாக முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலி உள்ளிட்டோர் மீது எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் 8ம் தேதி இளம் தலை முறையினர் பார்லிமென்டை நோக்கி பேரணி மற்றும் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டனர்.

இந்த போராட்டங்கள் நாடு முழுவதும் பரவி வன்முறையாக மாறியதுடன், பாதுகாப்பு படையினருடன் மோதல் ஏற்பட்டது. இரண்டு நாட்கள் நடந்த வன்முறையில் 76 பேர் வரை உயிரிழந்தனர். இதையடுத்து முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலி தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இந்த போராட்டங்களில் துப்பாக்கிச் சூடு மற்றும் வன்முறையால் ஏற்பட்ட இறப்புகளுக்கு முன்னாள் பிரதமர் மற்றும் தொடர்புடையவர்கள் காரணியாக இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். விசாரணைக்காக உயர்மட்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. போலீசார் பதிவு செய்த எப்.ஐ.ஆர்., அந்தக் குழுவின் விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேபாளத்தின் அரசியல் சூழலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் மற்றும் சர்வதேச வட்டாரங்கள் பாதுகாப்பு மற்றும் அரசியல் நிர்வாகத்தை கவனித்து வருகின்றனர். விசாரணை முடிவுகள் எதிர்கால அரசியல் நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை ஆகும்.