வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வாக்காளர் பதிவுக்கு குடியுரிமைக்கான ஆவணச் சான்று கட்டாயம் இருக்க வேண்டும் என கூறும் நிர்வாக உத்தரவை கையெழுத்திட்டார். இந்த புதிய உத்தரவை அமல்படுத்தி, தேர்தல் நடைமுறைகளில் பல மாற்றங்களை கடைபிடிக்க திட்டமிட்டுள்ளதால், இது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற முதல் நாளிலிருந்தே டிரம்ப் பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், குடியுரிமைக்கான ஆவணச் சான்று கட்டாயமாகும் நிர்வாக உத்தரவு, தேர்தல் நாளுக்குள் வாக்குச்சீட்டுகளை அனைவரும் பெறுவது, மற்றும் வாக்காளர் பதிவுக்கு கூடுதல் சான்று வழங்குவது உள்ளிட்ட முக்கியமான அம்சங்களை உள்ளடக்கியுள்ளது.
மேலும், ‘கூட்டாட்சி தேர்தல்களில் வாக்களிக்கும் தகுதிக்கு பாஸ்போர்ட் போன்ற குடியுரிமை சான்றிதழ் கட்டாயம் இருக்க வேண்டும்’ என டிரம்ப் அறிவித்துள்ளார். உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை, சமூகப் பாதுகாப்பு நிர்வாகம் மற்றும் வெளியுறவுத்துறை போன்ற முக்கிய நிறுவனங்கள், குடியுரிமை சான்றிதழ் இல்லாதவர்களை அடையாளம் காண உதவும் தரவுகளை தேர்தல் அதிகாரிகளிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மாற்றங்கள், அடுத்த வாரங்களில் அமெரிக்க தேர்தல் நடவடிக்கைகளில் முன்னேற்றங்களை உருவாக்கும் என்று டிரம்ப் தெரிவித்தார்.