பிஜீங்: அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுத்த சீனா… தைவானுக்கு சுதந்திரம் கேட்கும் பிரிவினைவாத சக்திகளை தூண்டுவதையும் ஆதரிப்பதையும் அமெரிக்கா உடனடியாக நிறுத்த வேண்டும் என சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
சீனாவில் கடந்த 1949-ல் நடந்த உள்நாட்டு போருக்கு பிறகு தைவான் தனி நாடாக உருவானது. தீவு நாடான தைவானுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வருகிறது. தைவானுக்கு அதிகளவில் அமெரிக்கா ஆயுதங்களை விற்பனை செய்து வருகிறது. சீனா படையெடுக்கும்பட்சத்தில் தைவானை பாதுகாப்போம் என அமெரிக்கா தெரிவித்திருந்தது.
ஆயுத விற்பனையில் அடுத்தகட்டமாக, 385 மில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. ஆயுத விற்பனைக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. அதன்படி போர் விமானங்கள் மற்றும் ரேடார் அமைப்புகளுக்கான உதிரி பாகங்கள் ஆகியவை அடுத்த ஆண்டு முதல் டெலிவரி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நடவடிக்கைக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறியிருப்பதாவது: சீனாவின் தைவான் பிராந்தியத்திற்கு அமெரிக்க ஆயுத விற்பனை செய்வது, ஒரே ஒரு சீனா என்ற கொள்கை, சீனா-அமெரிக்க கூட்டறிக்கைகள், சீனாவின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பு நலன்களை கடுமையாக மீறும் செயலாகும். சர்வதேச சட்டத்தையும் கடுமையாக மீறுவதாகும்.
ஆயுத விற்பனையானது தைவான் பிரிவினைவாத சக்திகளுக்கு மிகவும் தவறான சிக்னலை அனுப்புகிறது. இதனால் தைவான் ஜலசந்தி முழுவதும் சீனா-அமெரிக்க உறவுகள், அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு தீங்கு விளைவிக்கும்.
தைவானுக்கு ஆயுதம் வழங்குவதையும், தைவானுக்கு சுதந்திரம் கேட்கும் பிரிவினைவாத சக்திகளை தூண்டுவதையும் ஆதரிப்பதையும் அமெரிக்கா உடனடியாக நிறுத்த வேண்டும். நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை பாதுகாக்க சீனா பதிலடி நடவடிக்கைகளை எடுக்கும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.