சுற்றுலாத் துறையின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில், சீன அரசு 30 நாட்கள் வரை விசா இல்லாமல் சுற்றுலாப் பயணம் செய்ய அனுமதிக்கும் திட்டத்தை விரிவுபடுத்தியுள்ளது. இந்த புதிய நடவடிக்கையின் கீழ் தற்போது 75 நாடுகளின் பட்டியலில் பயணிகள் சீனாவுக்குள் வந்துசெல்லலாம். எனினும், இந்தியா அந்த பட்டியலில் இடம்பெறாமல் தொடர்ந்திருப்பது கவனிக்கத்தக்கது.

கொரோனா பரவலின் போது சீனாவுக்குள் வெளிநாட்டு பயணிகள் வருகை நிறுத்தப்பட்டதன் தாக்கம் சுற்றுலா வருவாயில் தீவிர குறைவை ஏற்படுத்தியது. 2019ம் ஆண்டில், 3.19 கோடி பயணிகள் சீனாவுக்கு வந்திருந்தனர். ஆனால் 2023ம் ஆண்டில், அந்த எண்ணிக்கை 1.38 கோடியாகக் குறைந்தது. இதனால், சீன அரசு சுற்றுலா நெருக்கடியை சமாளிக்க விசா விதிமுறைகளை தளர்த்தத் தொடங்கியது.
முதலில், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, மலேசியா ஆகிய நாடுகளுக்கு 2023 டிசம்பரில் 30 நாள் விசா விலக்கு வழங்கப்பட்டது. தொடர்ந்து, அந்த சலுகை படிப்படியாக அதிகமான நாடுகளுக்கு வழங்கப்பட்டது. கடந்த ஆண்டிலேயே, சுமார் 2 கோடி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் விசா இல்லாமல் சீனாவுக்குள் வந்தனர். இது மொத்த பயணிகளின் 33 சதவீதமாகும்.
தற்போது, அஜர்பெய்ஜான் போன்ற நாடுகளும் இந்த விசா விலக்கு திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. இதனால், சீனாவிற்கான 30 நாள் விசா விலக்கு பெறும் நாடுகளின் எண்ணிக்கை 75 ஆக உயர்ந்துள்ளது. ஆனால், இந்தியா தொடர்ந்து அந்த பட்டியலில் சேர்க்கப்படாதது இருநாட்டுக்கிடையேயான உறவுநிலை குறித்து புதிய கேள்விகளை எழுப்புகிறது.