பனாஜி: புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்தின் (சிஏஏ) கீழ் பாகிஸ்தானைச் சேர்ந்த கிறிஸ்தவர் ஒருவருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.
நாடு சுதந்திரம் அடைவதற்கு முன், கோவாவைச் சேர்ந்த ஜோசப் பிரான்சிஸ் பெரைரா பாகிஸ்தானுக்குப் படிக்கச் சென்றார். படிப்பை முடித்துவிட்டு பாகிஸ்தான் குடியுரிமை பெற்று அங்கு வேலை பார்த்து வந்தார்.
கராச்சியில் வசித்து வந்த அவர், 2013-ல் இந்தியா திரும்பி கோவாவில் வசித்து வருகிறார். கோவாவை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில், அவர் சிஏஏ சட்டத்தின் கீழ் இந்திய குடியுரிமை வழங்க விண்ணப்பித்திருந்தார்.
கோவாவை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டதால், அவருக்கு இந்திய குடியுரிமை வழங்குவதில் பல்வேறு சிக்கல்கள் எழுந்தன. தற்போது பிரச்னைகள் தீர்ந்துவிட்ட நிலையில், கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், ஜோசப் பிரான்சிஸ் பெரைராவுக்கு இந்திய குடியுரிமை சான்றிதழை நேற்று வழங்கினார்.
சிஏஏ 2019-ம் ஆண்டு மத்திய அரசால் இயற்றப்பட்டது. இதன்படி, 2014 டிசம்பர் 31-ம் தேதிக்கு முன் இந்தியாவிற்கு வந்த வங்காளதேசம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இந்துக்கள், சீக்கியர்கள், ஜைனர்கள், பௌத்தர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
தற்போது, ஜோசப் பிரான்சிஸ்பெரைரா தனது குடும்பத்துடன் கேன்வாலிம் கிராமத்தில் வசித்து வருகிறார். இதன் மூலம், சிஏஏ-ன் கீழ் இந்திய குடியுரிமை பெறும் முதல் கோவா என்ற பெருமையை பெரைரா பெற்றுள்ளார்.