
துபாயில் அண்மையில் திறக்கப்பட்ட புதிய வணிக வளாகம் ‘அல் கவானீஜ் மால்’ பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த மால், துபாயின் அல் கவானீஜ் 2 பகுதியில் அமைந்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் வளர்ச்சியை பிரதிபலிக்கும் முக்கிய அடையாளமாக இது அமைந்துள்ளது. சுமார் 70,000 சதுர அடியில் கட்டப்பட்டுள்ள இந்த மால், யூனியன் கோ-ஆப்பின் 29வது கிளையாகும்.

மாலை நடைபெற்ற திறப்பு விழாவில், யூனியன் கோ-ஆப் தலைவர் மஜித் ஹமாத் ரஹ்மா அல் ஷம்சி, தலைமை நிர்வாக அதிகாரி முகமது அல் ஹஷேமி உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த மாலின் சிறப்பம்சங்களில் ஒன்றாக, அத்தியாவசிய சேவைகள் அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கின்றன. இதில், நவீன ஹைப்பர் மார்க்கெட், சில்லறை கடைகள், சேவை மையங்கள், குழந்தைகளுக்கான நர்சரி, பெட்ரோல் நிலையம் மற்றும் வெளிப்புற வாகனநிலையம் போன்றவை உள்ளன.
மால் முழுவதும் இயற்கை ஒளி ஊடுருவும் திறந்த நடைபாதைகள் வாடிக்கையாளர்களுக்கு நவீன அனுபவத்துடன் எளிமையான ஷாப்பிங் சூழலை வழங்குகின்றன. இது குடும்ப நட்பு சூழலாகவும், சமூக தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில், பிரபலமான உணவகங்கள், கஃபேக்கள், நாணய மாற்று நிலையம், வங்கி உள்ளிட்டவை உள்ளடக்கப்பட்டுள்ளதால், இது ஒரு முழுமையான வாழ்க்கை மையமாக திகழ்கிறது.
இத்திட்டம் மொஹம்மட் பின் ராஷித் ஹவுசிங் எஸ்டாப்லிஷ்மென்ட் உடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது. அரசும் தனியார் நிறுவனங்களும் இணைந்து செயல்படுவதற்கான சிறந்த உதாரணமாக இது விளங்குகிறது. துபாய் நகரத்தின் உள்கட்டமைப்பு வளர்ச்சி பல நாடுகளுக்கே முன்மாதிரியாக மாறி வருகிறது. மெட்ரோ, விமான நிலையங்கள், போக்குவரத்து வசதிகள் மற்றும் தொழில்துறை கட்டடங்கள் அனைத்தும் விரைவில் வளர்ந்து வருகின்றன.
அல் கவானீஜ் மால் மட்டுமல்லாமல், துபாயில் உள்ள மால் ஆஃப் எமிரேட்ஸ், ஐபிஎன் பட்டுடா மால் போன்றவை உலகத் தரமான வசதிகளை வழங்கி வருகின்றன. இவை சுற்றுலா பயணிகளுக்கு மட்டும் அல்லாமல் முதலீட்டாளர்களுக்கும் மிகவும் முக்கியமான இடங்களாக உள்ளன.
மொத்தத்தில், துபாயில் திறக்கப்பட்ட இந்த புதிய மால், வணிக வளர்ச்சிக்கான ஒரு புதிய கட்டத்தை தொடக்கி, அந்த நகரத்தின் அடையாளங்களில் ஒன்றாக உயர்ந்துள்ளது. வர்த்தகம், சமுக சேவைகள் மற்றும் பொழுதுபோக்கு – அனைத்தையும் ஒரே இடத்தில் பெற முடியும் என்ற இத்தகைய அமைப்புகள், துபாயை ஒரு உலக தரத்திலான நகரமாக உருவாக்குகின்றன.