புத்த மதத்தின் ஆன்மிகத் தலைவராக விளங்கும் தலாய் லாமா தனது 90வது பிறந்த நாளைக் கடந்த நாளில் தரம்சாலாவில் உள்ள தலாய் லாமா கோவிலில் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடினார். திபெத்தில் பிறந்த அவரை சீன அரசின் அடக்குமுறைக்கு எதிராக தனது சமூகத்தினரை வழிநடத்தும் பணி செய்ததற்காக, இந்தியாவில் சிறப்பு தங்குமிடம் வழங்கப்பட்டது. தற்போது ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ள தரம்சாலா நகரம் தலாய் லாமாவின் வசிப்பிடமாகவும் ஆன்மிகத் தலைமையிடமாகவும் உள்ளது.

தன் மறைவுக்குப் பிறகு அடுத்த தலாய் லாமா தேர்வு செய்யும் உரிமை குறித்து அவர் கூறியதிலிருந்து புதிய விவாதங்கள் உருவாகியுள்ளன. தலாய் லாமா, இந்த தேர்வின் முழுப்பட்ட அதிகாரமும் போட்ராங் அறக்கட்டளைக்கு உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்தக் கருத்துக்கு சீன அரசு கடும் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், இந்திய மத்திய அரசு தலாய் லாமாவின் நிலைப்பாட்டுக்கு உறுதுணையாக நிற்பதாகவும், திபெத் மக்களின் உரிமைகளை மதிக்க வேண்டியது அவசியம் எனவும் வலியுறுத்தியுள்ளது.
தரம்சாலாவில் நடைபெற்ற 90வது பிறந்த நாள் விழாவில் பல முக்கியமான அரசியல், ஆன்மிக மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதில் மத்திய அமைச்சர்கள் கிரண் ரிஜிஜு, ராஜிவ் ரஞ்சன் சிங், அருணாச்சல முதல்வர் பெமா காண்டு உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். பள்ளி மாணவர்கள் கலை நிகழ்ச்சிகள் மற்றும் இசை நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு விழாவை வண்ணமயமாக்கினர்.
தலாய் லாமா தனது உரையில், “மக்களின் அன்பும் கருணையும் தான் உயிர்கள் அனைத்திற்கும் என்னை சேவை செய்ய தூண்டுகிறது” என உருக்கமாக கூறினார். அவருக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, தைவான் அதிபர் லாய் சிங்-டே உள்ளிட்ட உலக தலைவர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.