பாகிஸ்தான்: கார்கில் போரில் நேரடியாக ஈடுபட்டதாக பாகிஸ்தான் ராணுவம் ஒப்புக் கொண்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
1999-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான கார்கில் போரில் நேரடியாக ஈடுபட்டதை பாகிஸ்தான் ராணுவம் பகிரங்கமாக முதன்முறையாக ஒப்புக் கொண்டுள்ளது.
நாட்டின் பாதுகாப்பு தினத்தையொட்டி, ராவல்பிண்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர், கார்கில் போரில் பல ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாகத் தெரிவித்தார்.
கார்கில் போரைப் போலவே, இந்தியாவுக்கு எதிரான 1948, 1965, 1971-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற போர்களிலும் பல ராணுவத்தினர், நாட்டுக்காக உயிரிழந்ததாக அவர் தெரிவித்தார்.
கார்கில் போரில் தங்களுக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்றும், அதில், முஜாஹிதீன் அல்லது போராளிகள் குழுவினர் ஈடுபட்டிருக்கலாம் என்றும் பாகிஸ்தான் ராணுவம் இதுவரை கூறிவந்தது.