வாஷிங்டன்: புளோரிடா ஆர்லாண்டோ சர்வதேச விமான நிலையத்தில் ஒரு குளியலறையில் இறந்த நாய் உடல் கண்டெடுக்கப்பட்டது. விசாரணையில், அந்த நாயை தண்ணீரில் மூழ்கடித்து கொன்ற பயணியை போலீசார் கைது செய்தனர்.
புளோரிடாவில் உள்ள ஆர்லாண்டோ விமான நிலையத்திற்கு 57 வயதான அலிசன் லாரன்ஸ் தனது நாய் டைவினுடன் வந்தார். அவர் கொலம்பியாவுக்கு விமானத்தில் பயணம் செய்ய திட்டமிட்டு இருந்தார். ஆனால், தனது செல்லப்பிராணிக்கு உரிய பயண ஆவணங்கள் இல்லாததால், விமானத்தில் செல்லப்பிராணியுடன் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இந்த சம்பவம் கடந்த டிசம்பர் 16-ம் தேதி நடந்தது.
பின்னர், அந்த பெண் தன் நாயை விமான நிலைய குளியலறையில் தண்ணீரில் மூழ்கடித்து கொன்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாயின் உடலை பிளாஸ்டிக் பையில் கட்டி, அவர் விமானத்தில் கொலம்பியாவுக்கு பயணம் செய்து விட்டார். சில நேரத்துக்குப் பிறகு, விமான நிலைய ஊழியர் ஒருவர் குளியலறையில் இறந்த நாயின் உடலை கண்டுபிடித்தார்.
இந்த தகவல் விமான நிலைய உயர் அதிகாரிகளுக்கு சென்றதும், அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தனர். விசாரணையில், நாய் நீரில் மூழ்கி இறந்தது உறுதி செய்யப்பட்டது. அதன்பின், நாயை கொன்ற அலிசன் லாரன்ஸை போலீசார் கைது செய்தனர். அவர் மீது விலங்குகளை கொடுமைப்படுத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதன்பின், அவர் 5,000 டாலர்களின் அபராதம் செலுத்தி ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் பரவியதையடுத்து, பல பயனர்கள் அதிர்ச்சியுடன் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். பலர் இந்த செயலை கொடூரமானது என்று குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.