வாஷிங்டன்: ரஷ்ய அதிபர் புதினுடன் விரைவில் பேச உள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.
2025 ஜனவரியில் புதிய அதிபராக பதவியேற்கவுள்ளார். இந்நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், “அமெரிக்க அதிபர் தேர்தலில் நான் வெற்றி பெற்ற பிறகு 70-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் என்னை தொடர்பு கொண்டு போனில் பேசினார்கள். ஆனால் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பேசவில்லை. விரைவில் பேசுவோம்.
ரஷ்யா – உக்ரைன் எல்லையில் போர் நடந்து வருகிறது. இந்நிலையில், எல்லைப் பகுதிகளில் இருந்து அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகளை வாபஸ் பெற டிரம்ப் அறிவுறுத்தலாம் எனத் தெரிகிறது. அடுத்த 20 ஆண்டுகளில் உக்ரைன் நேட்டோவில் இணையாது என டிரம்ப் மூலம் ரஷ்யாவுக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது அமெரிக்காவின் உதவி மற்றும் நிதியுதவியுடன் ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைன் போர் தொடுத்து வருகிறது.
ட்ரம்ப் அதிபராக பதவியேற்றதும் உக்ரைனுக்கான ஆயுதங்கள் மற்றும் நிதியுதவியை நிறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க உதவி கிடைக்காத நிலையில் உக்ரைன் அரசு அமைதிப் பேச்சுவார்த்தைக்கு திரும்பும் என டிரம்ப் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.