
அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் டிரம்ப், புதிதாக அறிவித்துள்ள “கோல்டன் விசா” திட்டம், 5 மில்லியன் டாலர் முதலீட்டிற்காக வழங்கப்படும் விசா வகையாகும். இந்த விசா அமெரிக்க குடியுரிமைக்கு நேரடியாக வழிவகுக்கும் என அவர் உறுதிபட தெரிவித்துள்ளார். TrumpCard.gov என்ற புதிய இணையதளம் மூலம், இந்த விசாவிற்கான முன்பதிவுகள் புதன்கிழமை முதல் தொடங்கப்பட்டுள்ளன.

டிரம்ப் தனது Truth Social சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட செய்தியில், அமெரிக்காவுக்குள் நுழைவதற்கான வழிகளை பற்றி ஆயிரக்கணக்கானோர் தினசரி கேட்டுக்கொள்கிறார்கள் எனத் தெரிவித்துள்ளார். அதற்கான தீர்வாக இந்த திட்டம் அமைகிறது என்று அவர் கூறினார். ஏற்கனவே ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்திலிருந்து தங்க நிற மாதிரியை காட்டிய டிரம்ப், இந்த விசா “இரண்டு வாரங்களுக்குள்” கிடைக்கும் என்ற வாக்குறுதியும் அளித்திருந்தார்.
TrumpCard.gov இணையதளத்தில் தற்போது விசாக்கள் வழங்கப்படவில்லை. எனினும், “டிரம்ப் கார்டு விரைவில் வருகிறது” என்ற அறிவிப்புடன், ஆர்வமுள்ளவர்கள் தங்களது பெயர், விருப்பமான விசா வகை மற்றும் மின்னஞ்சலைச் சமர்ப்பிக்கலாம். பாரம்பரிய கிரீன் கார்டின் ஒரு உயர்ந்த பதிப்பாக இந்த கோல்டன் விசா கருதப்படுகிறது.
இந்த விசா திட்டம், அமெரிக்காவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் முதலீட்டாளர்களை ஈர்க்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டதாகவும், நாட்டின் வருவாய் குறையை சமாளிக்க உதவும் என்றும் டிரம்ப் கூறியுள்ளார். அவர் இந்த திட்டத்தின் மூலம் ஒரு மில்லியனுக்கும் அதிகமான விசாக்கள் விற்கப்படலாம் என நம்புவதாகத் தெரிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பு, குடியேற்றம் குறித்த அமெரிக்க அரசாங்க நடவடிக்கைகள் கடுமையாக மாறிவரும் நேரத்தில் வெளியாகியுள்ளது. சட்டப் போராட்டங்கள், மனித உரிமை மீறல்கள் போன்ற குற்றச்சாட்டுகளும் தொடர்ந்து முன்வைக்கப்பட்டுவரும் நிலையில், புதிய வாயிலாக இந்த திட்டம் அமைந்துள்ளது.
டிரம்ப், இந்த புதிய ‘கார்டு’ அமெரிக்க குடியுரிமைக்கு வழிவகுக்கும் மிக முக்கியமான வழியாக இருக்கும் என்றும், பல உலகப் பணக்காரர்கள் – குறிப்பாக ரஷ்ய கோடீஸ்வரர்கள் – இந்த வாய்ப்பை பயன்படுத்த வாய்ப்பு உள்ளது என்றும் கூறியுள்ளார். இந்த திட்டம் எவ்வளவு பரவலான வரவேற்பைப் பெறுகிறது என்பதை எதிர்காலமே தீர்மானிக்கும்.