லண்டன்: பிரிட்டனில் கடும் தண்ணீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. 1967க்கு பிறகு இவ்வளவு மோசமான வறட்சி நிலைமை இங்கு பதிவாகியுள்ளது. அணைகள், ஆறுகள், குளங்களில் நீர்மட்டம் குறைந்து வருவதால் அரசு கடும் சவால்களை சந்தித்து வருகிறது. வெப்பமும் அதிகரித்துள்ளதால் நிலைமை மேலும் மோசமாகியுள்ளது.

இந்த சூழலில் தண்ணீர் பயன்பாட்டை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. வீட்டு உபயோக நீருக்கு கூட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே, தேசிய வறட்சி குழுவின் பரிந்துரையின் பேரில், பிரிட்டன் அரசு ஒரு விசித்திரமான உத்தரவை வெளியிட்டுள்ளது.
அதில், தண்ணீரை சேமிக்க பொதுமக்கள் தங்கள் மின்னஞ்சல் கணக்குகளில் இருக்கும் பழைய செய்திகளை நீக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த ஆலோசனை மக்கள் மத்தியில் ஆச்சரியத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மின்னஞ்சல்களை நீக்குவதன் மூலம் சர்வர்களில் மின்சாரச் செலவு குறையும், அதனூடாக தண்ணீர் பயன்பாடும் குறையும் என அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர். ஏனெனில் பெரிய அளவிலான டேட்டா சென்டர்களை பராமரிக்க அதிக மின்சாரமும், தண்ணீரும் பயன்படுத்தப்படுகின்றன.
எனினும், பலர் இந்த உத்தரவை சமூக வலைத்தளங்களில் நையாண்டியுடன் விமர்சித்துள்ளனர். “பழைய மின்னஞ்சல் நீக்கினால் உண்மையில் எவ்வளவு தண்ணீர் சேமிக்கப்படும்?” என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இந்த உத்தரவுக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்துள்ளனர். சிறிய மாற்றங்களே கூட பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். மின்னஞ்சல் போன்ற தேவையற்ற சேமிப்புகளை குறைப்பது வளங்களைப் பாதுகாக்க உதவும் என அவர்கள் கூறியுள்ளனர்.
இவ்வாறான சூழலில் பிரிட்டன் அரசு மக்கள் ஒத்துழைப்பை எதிர்பார்த்து வருகின்றது. கடுமையான வறட்சியை சமாளிக்க மக்கள் அனைவரும் தங்கள் பங்கைச் செய்ய வேண்டியது அவசியம் எனவும் அரசு வலியுறுத்தியுள்ளது.