துபாய் ஆட்சியாளர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூமின் மகளான ஷேக்கா மஹ்ரா, தனது வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை அறிவித்துள்ளார். 2023-ல் துபாய் இளவரசர் ஷேக் மனாவுடன் திருமணம் செய்து ஒரு பெண் குழந்தைக்கு தாயான இவர், கடந்தாண்டு சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் பதிவு வெளியிட்டு விவாகரத்து செய்தார். காரணமாக, கணவரின் பிற பெண்களுடனான தொடர்புகளைச் சுட்டிக்காட்டியிருந்தார்.

அதன்பின், அமெரிக்க ராப் பாடகரும் மொராக்கோ வம்சாவளியுமான பிரெஞ்சு மொன்டானாவுடன் (உண்மையான பெயர் கரீம் கார்பூச்) நெருக்கம் அதிகரித்தது. இருவரும் பல நிகழ்ச்சிகளில் இணைந்து பங்கேற்று வந்த நிலையில், நேற்று இவர்களின் நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
40 வயதான பிரெஞ்சு மொன்டானா முன்பு திருமணம் செய்து விவாகரத்து பெற்றவர். அவருக்கு தற்போது 16 வயது மகன் உள்ளார். மொராக்கோவில் பிறந்து, அமெரிக்காவில் இசை உலகில் புகழ் பெற்றவர் அவர். மஹ்ராவும், மொன்டானாவும் ஒருவருக்கொருவர் புதிய வாழ்க்கை தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த திருமண நிச்சயதார்த்தம், துபாயிலும் சர்வதேசத்திலும் பேசுபொருளாகி வருகிறது. ஒரு பக்கம் துபாய் அரச குடும்பத்தின் பாரம்பரிய பின்புலம், மற்றொரு பக்கம் அமெரிக்க இசை உலகின் பிரபல ராப் பாடகர் என்பதால், இந்த இணைப்பு தனித்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.