பிரிஸ்பேன் அருகே ஆஸ்திரேலியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. குயின்ஸ்லாந்தின் சன்ஷைன் கடற்கரைக்கு அருகில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவாகியுள்ளது. புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி, நூநாவுக்கு மேற்கு 60 கிலோமீட்டர் தொலைவிலும், பிரிஸ்பேனுக்கு வடக்கே 250 கிலோமீட்டர் தொலைவிலும் இதன் மையம் அமைந்திருந்தது.

நிலநடுக்க அதிர்வுகள் வடக்கே நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் ராக் ஹாம்ப்டன் வரை, தெற்கே க்ளென் இன்னெஸ் வரை உணரப்பட்டதாக மக்கள் தெரிவித்துள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குயின்ஸ்லாந்து ரயில் நிர்வாகம், போக்குவரத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. பிரிஸ்பேன் நகரில் உள்ள அனைத்து ரயில்களும் குறைந்த வேகத்தில் இயக்கப்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.
இதுவரை உயிரிழப்பு அல்லது பெரிய சேதம் குறித்து எந்த தகவலும் வெளிவரவில்லை. மேலும் சுனாமி அபாய எச்சரிக்கையும் விடப்படவில்லை. மக்கள் அச்சமின்றி அமைதியாக இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியாவில் சமீபகாலமாக அடிக்கடி நிலநடுக்கங்கள் பதிவாகி வருவதால், அவை மீதான புவியியல் ஆராய்ச்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.