சென்னை: தமிழகத்தில் நடைபெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுடன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கடந்த 23-ம் தேதி சிங்கப்பூர் சென்றார். 3 நாள் கல்விச் சுற்றுலா நேற்றுடன் நிறைவடைந்தது. அமைச்சர் மற்றும் மாணவர்கள் நேற்று தமிழகம் திரும்பினர். இந்நிலையில் சிங்கப்பூர் கல்விச் சுற்றுலா குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
கல்விச் சுற்றுலாவாக 2 நாட்களுக்கு முன்பு சிங்கப்பூர் சென்றோம். இந்த நாட்டில் உள்ள தேசிய நூலகங்கள், பல்கலைக்கழகங்கள் போன்ற அறிவுசார் மையங்களை மாணவர்களுடன் பார்வையிட்டோம். சிங்கப்பூரில் அமைந்துள்ள கார்டன்ஸ் பை தி பே என்ற நகரப் பூங்காவையும் தமிழக அரசுப் பள்ளி மாணவர்கள் பார்வையிட்டனர். சிங்கப்பூரின் நிலையான வளர்ச்சிக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகள் குறித்த பல்வேறு தகவல்களை வழங்கும் இடமான மெரினா கேரேஜுக்கு மாணவர்களுடன் சென்றோம்.
சிங்கப்பூரின் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கல்வி பயிற்றுனர்கள் விளக்கினர். சிங்கப்பூர் பயணத்தின் 3-வது நாள் அங்குள்ள புகழ்பெற்ற தேசியப் பல்கலைக்கழகத்தைப் பார்வையிட்டோம். அங்குள்ள உயர்கல்வி வாய்ப்புகள் குறித்து மாணவர்கள் அறிந்து கொண்டனர். இதையடுத்து, தமிழக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளுடன் சிங்கப்பூர் தேசிய நூலகத்துக்கு மாணவர்கள் சென்றனர்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து நூலக அதிகாரியிடம் மாணவர்கள் விளக்கினர். தமிழக பள்ளிக் கல்வித்துறையில் , தமிழகம் வெளியிட்ட திட்டப் புத்தகங்களையும் வழங்கினார். கல்வி முன்னேற்றத்திற்காக தமிழக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களை விவரிக்கும் இந்நூலை சிங்கப்பூர் வாசகர்களிடம் கொண்டு சேர்ப்போம் என சிங்கப்பூர் தேசிய நூலக அதிகாரி தெரிவித்தார். இதனை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.