அமெரிக்கா: தொழிலதிபர் எலான் மஸ்க் நிறுவனப் பங்குகளின் மதிப்பு கடுமையாக சரியத் தொடங்கியுள்ளது. அரசியல் கட்சி அறிவிப்பால், டெஸ்லா பங்குகள் 6.8% வரை (திங்கள் கிழமை நிலவரம்) சரிந்துள்ளன. இதனால், 15.3 பில்லியன் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.
டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும் தொழிலதிபருமான எலான் மஸ்க், அமெரிக்காவின் குடியரசு மற்றும் ஜனநாயகக் கட்சிகளுக்கு மாற்றாக அமெரிக்கா கட்சியைத் தொடங்கியுள்ளதாக அந்நாட்டின் சுதந்திர தினத்தன்று (ஜூலை 4) அறிவித்தார்.
புதிய கட்சியைத் தொடங்குவது குறித்து எக்ஸ் தளப் பக்கத்தில் நடத்திய வாக்கெடுப்பில் மூன்றில் 2 பங்கு மக்கள் ஆதரவு தெரிவித்ததால், புதிய கட்சி அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
அமெரிக்க மக்களுக்கு தங்களின் சுதந்திரத்தை மீட்டளிப்பதே அமெரிக்கா கட்சியின் நோக்கம் எனவும் எலான் மஸ்க் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டிருந்தார். அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து, எலான் மஸ்க் இவ்வாறு அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.
டிரம்ப் நிர்வாகத்தில், அரசு செயல்திறன் மேம்பாட்டுத் துறை ஆலோசகராக மஸ்க் இருந்தார். இதில், பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டார். இதனிடையே, நாளடைவில், அமெரிக்க வரிச்சலுகை, குடியேற்ற மசோதா தொடா்பாக டிரம்ப் – எலான் மஸ்க் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்தக் கருத்து வேறுபாடு பொதுவெளியில் சர்ச்சையை ஏற்படுத்தியதால், அப்பதவியில் இருந்து மஸ்க் விலகினார். தற்போது புதிய கட்சியையும் தொடங்கியுள்ளார்.
அமெரிக்காவில் இரு கட்சி ஆட்சி முறை மட்டுமே பல ஆண்டுகளாக இருந்து வந்த நிலையில், தற்போது மூன்றாவது கட்சி அமெரிக்காவில் உருவாகியுள்ளது. இதனால், எலான் மஸ்க் தீவிரமாக அரசியலில் இறங்கியுள்ளது உறுதியாகியுள்ளது. அரசியல் கட்சி அறிவிப்பால், எலான் மஸ்க்கின் நிறுவனப் பங்குகள் சரிந்து வருகின்றன. டெஸ்லா பங்குகள் 6.8% வரை (திங்கள் கிழமை நிலவரம்) சரிந்துள்ளன. இதனால், 15.3 பில்லியன் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பில் ரூ. 1.3 லட்சம் கோடி. டொனால்ட் டிரம்ப்பிடம் இருந்து விலகிய பிறகு எலான் மஸ்க் சந்திக்கும் மிகப்பெரிய சரிவாக இது பார்க்கப்படுகிறது.
டிரம்ப் நிர்வாகத்தில் இருந்தது, தற்போது தனிக் கட்சி தொடங்கியது என இந்த ஆண்டில் அதிகப்படியாக அரசியல் நிர்வாகத்தில் மஸ்க் ஈடுபட்டுள்ளதால், அவரின் பங்குகள் இதுவரை 27% வரை சரிந்துள்ளன.