நியூ சவுத் வேல்ஸ்: நிமோனியா போன்ற நோய் காரணமாக ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் ஐந்து புதிய Legionnaires நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. அவர்கள் ஐந்து பேரும் சிட்னியின் மத்திய வணிக மாவட்டத்திலிருந்து திரும்பியவர்கள் என்று கண்டறியப்பட்டது.

இந்நிலையில், மார்ச் 30 முதல் ஏப்ரல் 4-ம் தேதி வரை பாதிக்கப்பட்ட நோயாளிகள் அனைவருக்கும் நோய் அறிகுறிகள் தோன்றியதாக கூறப்படுகிறது. நோய் பரவுவதற்கான காரணத்தை கண்டறியும் முயற்சியில் அந்நாட்டு அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த வகை பாக்டீரியாக்கள் மனித உடலில் நுழைந்த 2 முதல் 10 நாட்களுக்குள் தலைவலி, காய்ச்சல் மற்றும் இருமல் போன்ற அறிகுறிகளைக் காட்டத் தொடங்கும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
காற்றினால் பரவும் நோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு 5 முதல் 10% வரை உயிரிழக்கும் அபாயம் இருப்பதாகவும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், நோய்க்கு உரிய சிகிச்சை அளிக்காவிட்டால் 80% வரை உயிரிழக்கும் அபாயம் உள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.