ஜெனீவாவில் நடைபெற்ற முக்கிய பேச்சுவார்த்தையில் ஈரானின் அணுசக்தி நடவடிக்கைகள் மீண்டும் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளன. 2015 ஆம் ஆண்டு அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளின் பங்களிப்பில் உருவான அணுசக்தி ஒப்பந்தம், ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபடாமல் இருக்க ஏற்படுத்தப்பட்டது. இதன் அடிப்படையில், ஈரானுக்கு விதிக்கப்பட்டிருந்த பல்வேறு சர்வதேச தடைகள் நீக்கப்பட்டன.

ஆனால் 2018 இல் அமெரிக்க அதிபராக இருந்த டொனால்டு டிரம்ப், ஒப்பந்தத்திலிருந்து விலகிய பிறகு, ஈரான் தனது யுரேனியம் செறிவூட்டும் பணிகளை அதிகரித்தது. இதனால் மேற்கு ஆசியாவில் பதற்றம் உருவாகி, இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இரண்டும் ஈரானின் அணுசக்தி வளாகங்களை தாக்கின. குறுகிய கால போராட்டத்திற்குப் பிறகு, இருதரப்பும் சமாதானம் ஏற்படுத்திக்கொண்டன.
தற்போது பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன் ஆகிய ஐரோப்பிய நாடுகள், ஈரான் மீண்டும் ஒப்பந்த விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என வலியுறுத்துகின்றன. குறிப்பாக, 60 சதவீத தரத்தில் செறிவூட்டப்பட்ட 400 கிலோ யுரேனியத்தை வேறு நாட்டுக்கு மாற்ற வேண்டும், அணு ஆயுதம் தயாரிக்கக் கூடாது, சர்வதேச முகமை ஆய்வாளர்களுக்கு வளாகங்களைத் திறக்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் வைக்கப்பட்டன. ஆனால், இதனை ஈரான் நிராகரித்ததால் பேச்சுவார்த்தை முடங்கியது.
இதனால், மூன்று ஐரோப்பிய நாடுகளும் 2015க்கு முன் அமல்படுத்தப்பட்ட ஐ.நா. பொருளாதார தடைகளை மீண்டும் நடைமுறைப்படுத்துவோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளன. ‘ஸ்னாப்பேக்’ செயல்முறையின் கீழ் எந்த நாடு வேண்டுமானாலும் ஈரான் விதிமுறைகளை மீறியதாக கருதினால், பழைய தடைகளை மீண்டும் கொண்டு வரலாம். வரும் அக்டோபர் 18க்கு முன் தீர்வு காணாவிட்டால், ஈரானுக்கு கடுமையான பொருளாதார அழுத்தம் எதிர்பார்க்கப்படுகிறது.