தைபே: தைவானில், பார்லிமென்டில் பெரும்பான்மை இல்லாததாலும், அரசின் முக்கிய மசோதாக்கள் மற்றும் திட்டங்களை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தடுக்கும் சூழ்நிலையில், அவர்களை பதவியில் இருந்து நீக்குவதற்கான தேர்தல் நடைபெற்றது. ஆனால், அந்த முயற்சி முதற்கட்டமாக தோல்வியடைந்தது.
கிழக்காசிய நாடான தைவான், சீனாவுடன் தொடர்ந்து உரசல்களை சந்தித்து வருகிறது. தைவானை சீனா தன் பகுதியாகவே கருதுகிறது. ஆனால் தைவான், தன்னை சுயாதீன நாடாக வலியுறுத்தி வருகிறது. இந்த சூழலில், ஜனநாயக முற்போக்கு கட்சியைச் சேர்ந்த லாய் சிங் டே அதிபராக கடந்த ஆண்டு பதவியேற்றார். அவரது கட்சி 113 இடங்களில் 51 இடங்களை மட்டுமே பெற்றதால், பெரும்பான்மை இல்லாமல் இயங்கிவருகிறது.
பார்லிமென்டில் கே.எம்.டி., கியோமின்டாங் கட்சி 52 இடங்களை, தைவான் மக்கள் கட்சி மற்றும் சுயேட்சைகள் சேர்ந்து 62 இடங்களை வகித்துள்ளனர். இதனால், லாய் கொண்டு வந்த மசோதாக்கள் நிறைவேறாமல் தடைப்பட்டன. இதையடுத்து, தைவான் சட்டப்படி எம்.பி.க்களை நீக்க தேர்தல் நடத்தும் உரிமையை பொதுமக்கள் பயன்படுத்தினர்.
தற்போது, கே.எம்.டி. கட்சியைச் சேர்ந்த 24 எம்.பி.க்களை பதவியில் இருந்து நீக்க தேர்தல் நடைபெற்றது. ஆனால், குறைந்தபட்சம் 25% வாக்காளர்கள் ஓட்டு செலுத்த வேண்டும் என்ற நிபந்தனை நிறைவேறவில்லை. எனவே, அந்த 24 எம்.பி.க்களும் தங்கள் பதவியில் தொடர வாய்ப்பு பெற்றுள்ளனர். அடுத்த கட்டமாக மேலும் ஏழு எம்.பி.க்களை நீக்க தேர்தல் நடக்கவுள்ளது.