ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டுள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பிரிட்டனில் பயணத்தை முடித்தவுடன் நேற்று ஆஸ்திரியா நாட்டுக்கு பயணித்துள்ளார். ஆஸ்திரியாவின் தலைநகர் வியன்னாவில் அவரை இந்தியாவின் துாதராக உள்ள சாம்பு எஸ் குமரன் விமான நிலையத்தில் நேரில் சென்று வரவேற்றார்.

பிரிட்டனில் அவர் மேற்கொண்ட பயணம் பல முக்கிய சந்திப்புகளால் சுறுசுறுப்பாக இருந்தது. லண்டனில் நடந்த இந்த பயணத்தின் போது, அந்நாட்டின் பிரதமர் கீயர் ஸ்டார்மரை நேரில் சந்தித்து பல்வேறு பொருளாதார மற்றும் நிதி வளர்ச்சிகள் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். அவருடன் மேலும், வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் ஜோனாதன் ரெனால்ட்ஸ் மற்றும் நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸுடன் முக்கிய கலந்துரையாடல்களில் ஈடுபட்டார். 13வது பொருளாதார மற்றும் நிதி பேச்சுவார்த்தையிலும் பங்கேற்றிருந்தார்.
இந்தப் பயணத்தைத் தொடர்ந்து, தற்போது ஆஸ்திரியாவிலும் அவர் அரசியல் மற்றும் பொருளாதார தலைவர்களுடன் தொடர் சந்திப்புகளை மேற்கொண்டு வருகிறார். அந்நாட்டின் நிதியமைச்சர் மார்கஸ் மொர்டர்போயரை சந்தித்து, இருநாட்டு நிதி ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து விவாதிக்க உள்ளார். அத்துடன், ஆஸ்திரியாவின் பொருளாதாரம், எரிசக்தி மற்றும் சுற்றுலா துறை அமைச்சர் வொல்ப்காங் ஹாட்மான்ஸ்போர்பர் மற்றும் பிற முக்கிய அரசியல் அதிகாரிகளையும் அவர் சந்திக்க திட்டமிட்டுள்ளார்.
இந்த பயணத்தின் மூலம் இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கிடையேயான பொருளாதார உறவுகள் மேலும் வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.