மாலே: மாலத்தீவு நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு மிகக் குறைந்த நிலைக்கு சென்றுள்ளது. இதன் விளைவாக, அந்நாட்டு ரிசர்வ் வங்கி வெளிநாட்டு நாணய பரிமாற்றங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இதனால் அங்குள்ள இந்தியர்கள் உட்பட வெளிநாட்டு தொழிலாளர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.
மாலத்தீவு ஒரு சிறிய தீவு நாடாக இருந்தாலும், அதன் வருவாயில் பெரும்பகுதியை சுற்றுலாத் துறை சார்ந்தே ஈட்டுகிறது. அண்மையில் சுற்றுலா வருவாய் குறைந்ததுடன், அரசாங்க நிதிநிலை பாதிக்கப்பட்டது. இதனால் டாலர் கையிருப்பு குறைந்து, நாட்டின் வங்கிகள் வெளிநாட்டு நாணயங்களை வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

புதிய விதிமுறையின்படி, ஒரு நபர் மாதத்திற்கு 150 அமெரிக்க டாலர் மட்டுமே பெற முடியும். இதற்கு முன்பு மாதம் 400 டாலர் வரை அனுமதி இருந்தது. மேலும், வெளிநாட்டு ஏடிஎம் வழியாக டாலர் எடுக்கும் வசதி முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இத்தகைய கட்டுப்பாடுகள் அக்டோபர் 25 முதல் அமலுக்கு வரவுள்ளதாக மாலத்தீவு நாணய ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த முடிவு அங்கு வேலைபார்க்கும் ஆயிரக்கணக்கான இந்தியர்கள், குறிப்பாக பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவம் மற்றும் சுற்றுலாத் துறையில் பணிபுரிபவர்கள் மீது தாக்கம் ஏற்படுத்தியுள்ளது. இதனால் தாயகத்துக்கு பணம் அனுப்ப முடியாமல் பலர் நெருக்கடியை எதிர்கொள்கின்றனர். நிபுணர்கள் எச்சரிக்கையில், இந்த நிலை தொடர்ந்தால் சட்டவிரோத பண பரிமாற்றங்கள் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது.