ஐரோப்பிய நாடான பிரான்சில், புகைப்பிடிக்கும் பழக்கம் ஒரு முக்கியமான சுகாதாரப் பிரச்சனையாக மாறியுள்ளது. அரசுத் தரவுகளின்படி, நாடு முழுவதும் புகைபிடிப்பால் தினசரி 200 பேர் உயிரிழக்கின்றனர். இது, பொதுமக்கள் நலனுக்கே நேரடியான அச்சுறுத்தலாக இருப்பதால், அரசாங்கம் கடுமையான கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தும் முடிவை எடுத்துள்ளது.

இந்த நடவடிக்கையின் மையத்தில், மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் நோக்கமும், பொது இடங்களில் புகைப்பிடிப்பால் பிறருக்கு ஏற்படும் பாதிப்பை குறைக்கும் நோக்கமும் உள்ளது. பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் தலைமையிலான அரசு, உணவகங்கள், பொது அலுவலகங்கள், கடற்கரைகள், பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள் போன்ற இடங்களில் புகைப்பிடிப்பதை தடை செய்துள்ளது. குறிப்பாக, குழந்தைகள் வசிக்கும் மற்றும் செல்வது போன்ற பகுதிகளில் தடை அதிகமாக அமல்படுத்தப்படுகிறது.
இந்த தடை, 2025 ஜூலை 1 முதல் அதிகாரபூர்வமாக அமலுக்கு வருகிறது. இதை மீறுபவர்களுக்கு, இந்திய மதிப்பில் சுமார் 13,000 ரூபாய் வரையிலான அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது, புகைபிடித்தலை அடக்குவதற்கான ஒரு கடுமையான எச்சரிக்கையாகவும் பார்க்கப்படுகிறது.
பிரான்ஸ் அரசு மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை, உலகம் முழுவதும் புகையிலை கட்டுப்பாட்டு முயற்சிகளுக்கு ஒரு முன்னுதாரணமாக அமைந்துள்ளது. இது போன்ற சட்டங்களின் வழியாக, சுகாதார விழிப்புணர்வும், பொது நலத்தையும் மேம்படுத்த முடியும் என்பதற்கான பலம் வாய்ந்த எடுத்துக்காட்டாக இது அமைகிறது.