இஸ்லாமாபாத்: இந்தியா மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை கண்டித்து, பாகிஸ்தானுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்த அஜர்பைஜான், இப்போது அதே பாகிஸ்தானிடம் மோசடிக்கு உட்பட்டிருப்பதாக பரபரப்பான தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஏப்ரல் 22ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதற்குப் பதிலளிக்க கடந்த மாதம் 7ம் தேதி இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தானுக்குள் புகுந்து, 9 பயங்கரவாத முகாம்கள், விமானப்படை மற்றும் ராணுவ தளங்களை தாக்கியது.

இந்த நடவடிக்கையை துருக்கி மற்றும் அஜர்பைஜான் கண்டித்தன. பாகிஸ்தானுடன் நட்புறவிலுள்ள இந்த இருநாடுகளும் இந்தியா மீது அதிருப்தி தெரிவித்ததோடு, பாகிஸ்தானுக்கு முழு ஆதரவு வழங்கும் நிலைப்பாட்டையும் வெளிப்படுத்தின. இதனால் இந்தியாவில் மக்கள் கடும் கோபத்தில் ஆழ்ந்தனர். அவர்கள் துருக்கி மற்றும் அஜர்பைஜானுக்கு சுற்றுலா செல்லுவதைத் தவிர்த்து, வர்த்தக உறவுகளையும் குறைத்தனர்.
இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள புதிய தகவல்படி, பாகிஸ்தான், அஜர்பைஜானின் நம்பிக்கையை துரோகரிக்கின்ற வகையில், அவர்களுடன் செய்யப்பட்ட போர் விமான ஒப்பந்தத்தில் மோசடி செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. அஜர்பைஜான், பாகிஸ்தானிடமிருந்து 40 ஜேஎஃப்-17 தண்டர் போர் விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த விமானங்களை பாகிஸ்தானின் ஏரோனாட்டிக்கல் காம்ப்ளக்ஸ் மற்றும் சீனாவின் செங்குடு ஏர்கிராப்ட் கார்ப்பரேஷன் தயாரிக்கின்றன.
ஜேஎஃப்-17 விமானம் ஒரு நவீன சிங்கிள் இன்ஜின், மல்டிரோல் போர் விமானமாகும். உண்மையில் ஒரு விமானத்தின் விலை 32 மில்லியன் அமெரிக்க டாலராகும். ஆனால் பாகிஸ்தான், இந்த ஒப்பந்தத்தை 4.6 பில்லியன் டாலராக கட்டுமானம் செய்துள்ளது. இதில் ஒவ்வொரு விமானத்திற்கும் 1.28 பில்லியன் டாலர் விலை வைத்துள்ளது. இதன் மூலம் உண்மையான மதிப்பை விட பல மடங்கு அதிக விலைக்கு அஜர்பைஜானை ஏமாற்றியுள்ளது.
இந்த மோசடி ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு துருக்கி நேரடி உதவி செய்துள்ளதாகவும், இரு நாடுகளும் சேர்ந்து அஜர்பைஜானை நிதியளவில் கடும் இழப்புக்கு உள்ளாக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதன் விளைவாக, பாகிஸ்தான் மற்றும் துருக்கியை நம்பிய அஜர்பைஜான் பெரும் இழப்பைச் சந்திக்க நேரிடுகிறது.