கும்பகோணம்: ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர அந்நாடுகளை சேர்ந்த நண்பர்கள் 2 பேர் தமிழக கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர்.
ரஷ்யாவை சேர்ந்தவர் ஷெனியா (27), உக்ரைனை சேர்ந்தவர் இலியானா (29). இரு நாடுகளுக்கிடையேயான போருக்கு முன்பிருந்தே இருவரும் நண்பர்கள். சமீபத்தில் இந்தியா வந்த இருவரும், இரு நாடுகளுக்கும் இடையே அமைதி மற்றும் சமாதானம் ஏற்பட வேண்டி, தமிழக கோவில்களில் வழிபாடு நடத்த முடிவு செய்தனர்.
இதையடுத்து கும்பகோணம் பகுதியில் உள்ள திருநள்ளாறு, திருநாகேஸ்வரம், கஞ்சனூர் சுக்ரன், திருமணஞ்சேரி ஆகிய கோயில்களில் கடந்த 2 நாட்களாக வழிபாடு நடத்தப்பட்டது. கும்பகோணத்தைச் சேர்ந்த புகழேந்தி வழிகாட்டினார்.
இந்நிலையில் நேற்று ஆடுதுறை அருகே 69 சாத்தனூர் கிராமத்தில் திருமந்திரம் அருள்பாலிக்கும் திருமூலர் கோயிலில் இருவரும் வழிபட்டனர். தொடர்ந்து, ஷெனியா, இலியானா நிருபர்களிடம் கூறியதாவது:-
ரஷ்யா, உக்ரைன் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வர கோவில்களில் பிரார்த்தனை செய்து வருகிறோம். எங்கள் நம்பிக்கை வீண் போகாது. இரு நாடுகளிலும் அமைதி நிலவ வேண்டும் என நம்புகிறோம்.
அடுத்து மதுரை மீனாட்சி அம்மன், பழனி, திருவண்ணாமலை கோயில்களுக்குச் சென்று வழிபாடு நடத்த உள்ளனர்.