பீஜிங்: சீன அதிபர் ஷி ஜின்பிங், வங்கதேச இடைக்கால அரசுக்கு முழு ஆதரவினை வழங்குவதற்கான உறுதியை அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
2024 ஆகஸ்டில் வங்கதேசத்தில் மாணவர்களின் போராட்டம் தீவிரமாகியபோது, அவாமி லீக் கட்சியின் தலைவர் ஷேக் ஹசீனா, பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்து, தப்பி வந்து நம் நாட்டில் புகுந்தார். இதன் பின்னர், அந்நாட்டில் பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு பதவியேற்றது.

வங்கதேசத்தில் உள்ள ஹிந்துக்கள் தாக்கப்படுவதற்கு நம் வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்தபோது, அந்நாட்டு அரசு நம் நாட்டின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடக்கூடாது என எச்சரித்தது.
நம் நாட்டுடன் வங்கதேசத்தின் உறவு மோசமாக இருக்கும் நிலையில், சீனா அந்நாட்டுக்கு தனது ஆதரவை வழங்கியுள்ளது. சீனாவின் முக்கிய நிறுவனங்கள் ஏற்கனவே வங்கதேசத்தில் கோடிக்கணக்கில் முதலீடு செய்துள்ளன.
சீனாவுக்கு சொந்தமான சிறப்பு விமானம் மூலம், வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் 26ஆம் தேதி சீனாவிற்கு பயணம் செய்தார். அங்கு அவர் பீஜிங்கில் சீன அதிபர் ஷி ஜின்பிங்கை சந்தித்து, வர்த்தகம், முதலீடு, விவசாயம், உட்கட்டமைப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, ரோஹிங்கியா பிரச்னைகள் போன்ற விவகாரங்கள் குறித்து விவாதித்தார்.
இந்த சந்திப்பை பற்றி, முகமது யூனுஸ் அவரின் பத்திரிகை செயலர் ஷபிகுல் ஆலம் கூறுகையில், “முகமது யூனுஸ் – ஜின்பிங் சந்திப்பு வெற்றிகரமாக இருந்தது. சீன அதிபர், வங்கதேச இடைக்கால அரசுக்கு முழு ஆதரவு வழங்குவதாக உறுதியளித்தார்,” எனத் தெரிவித்தார்.
மேலும், ஜின்பிங், “சீன முதலீட்டை ஊக்குவித்து, சீன உற்பத்தி நிறுவனங்களை வங்கதேசத்திற்கு மாற்ற உதவுவேன்” என கூறினார். இந்த சந்திப்பு, சீனா – வங்கதேச கூட்டணியில் ஒரு முக்கிய மைல்கல் என அவர் கூறினார்.
இந்த சந்திப்பின் பின்னர், முகமது யூனுஸ் சீனாவின் பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களை சந்திக்கத் திட்டமிட்டுள்ளார். வழக்கமாக, சிறிய குழுவுடன் வெளிநாட்டு பயணத்தை மேற்கொள்ளும் முகமது யூனுஸ், இந்த முறை வெளியுறவு, மின்சாரம், எரிசக்தி, கனிமங்கள், சாலைப் போக்குவரத்து, பாலங்கள் மற்றும் ரயில்வே துறை வல்லுநர்களை அழைத்துச் சென்றார்.
வங்கதேசம் – சீனாவுக்கு இடையே ஒன்பது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதில் பொருளாதாரம், தொழில்நுட்பம், பழமையான இலக்கியங்களை பதிப்பித்தல், மொழி மாற்றம், ஊடகத் துறையில் தகவல் பரிமாற்றம், கலாசார பரிமாற்றம் மற்றும் சுகாதாரத் துறையில் இணைந்து செயல்படுதல் போன்ற துறைகள் அடங்குகின்றன.