காசா மோதல் தீவிரமடைந்து வரும் சூழலில், அமெரிக்கா அமைதி ஏற்படுத்த 21 அம்சங்களை கொண்ட விரிவான திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால், காசா பகுதி இனி தீவிரவாத அச்சுறுத்தலின்றி, மக்களுக்கு பாதுகாப்பான வாழ்விடமாக மாறும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
திட்டத்தின் படி, இஸ்ரேல் காசாவில் இருந்து படிப்படியாக விலகும். அனைத்து பணயக்கைதிகளும் விடுவிக்கப்படுவார்கள். ஹமாஸ் அமைதியாக வாழ ஒப்புக்கொண்டால் பொது மன்னிப்பும் வழங்கப்படும். வெளியேற விரும்பும் ஹமாஸ் உறுப்பினர்களுக்கு பிற நாடுகள் பாதுகாப்பான பயண வசதி ஏற்படுத்தித் தரும். இதோடு, தினசரி 600 லாரிகள் அளவுக்கு மனிதாபிமான உதவி காசாவுக்கு செல்லும்.

காசாவில் இடைக்கால நிர்வாகம் அமைக்கப்படும். அமெரிக்கா தலைமையில் அரபு மற்றும் ஐரோப்பிய நாடுகள் பங்கேற்கும் குழு, மறுசீரமைப்பு மற்றும் நிதி திரட்டும் பணிகளை கவனிக்கும். ஹமாஸ் தாக்குதல் சுரங்கங்கள், ராணுவ கட்டமைப்புகள் அனைத்தும் அகற்றப்படும். பாதுகாப்பை உறுதிப்படுத்த சர்வதேச படைகள் களமிறங்கும்.
அமெரிக்கா இந்தத் திட்டம் காசா மக்களின் எதிர்காலத்தை பாதுகாப்பதோடு, இஸ்ரேலின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் என்று தெரிவித்துள்ளது. இந்த 21 அம்ச அமைதி திட்டம் நடைமுறைக்கு வந்தால், நீண்டகாலமாக நீடித்து வரும் காசா மோதலில் ஒரு தீர்வு கிடைக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.