எகிப்து தலைநகர் கெய்ரோவில் நாளை நடைபெற உள்ள உலக அமைதி மாநாட்டில், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளது. இந்த நிகழ்வில் அமெரிக்க அதிபர் டிரம்ப், எகிப்து அதிபர் அப்தெல் பத்தா ஆகியோர் தலைமை தாங்கவுள்ளனர். முக்கிய நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் அதிகாரப்பூர்வ அழைப்பு சென்றுள்ளது. எனினும், பிரதமர் மோடிக்கு பதிலாக மத்திய அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தவுள்ளார்.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான இரண்டாண்டுகால கடும் போர், ஆயிரக்கணக்கான உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. இதனை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் நேரடி தலையீடு செய்ததின் பின்னர், கடந்த வாரம் முதல் போர் நிறுத்தம் அமலாகி வருகிறது. இதையடுத்து, காசாவின் வடக்குப் பகுதியில் இருந்து பாலஸ்தீனர்கள் தங்கள் குடியிருப்புகளுக்கு திரும்பி வருகின்றனர்.
அமைதி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, இஸ்ரேல் தனது படைகளை காசாவில் இருந்து திரும்பப் பெறத் தொடங்கியுள்ளது. மேலும், 250 பாலஸ்தீன கைதிகளை விடுதலை செய்யும் விவகாரத்திலும் ஆலோசனைகள் முன்னேறி வருகின்றன. இருப்பினும், சில பிரிவுகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்த அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிகழ்வு உலக அரசியல் வரலாற்றில் முக்கிய மைல்கல்லாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், மேற்காசிய பிராந்தியத்தில் நீண்டநாள் நிலவி வந்த பதற்றம் குறையுமா என்பது உலக நாடுகள் ஆவலுடன் நோக்கி வருகின்றன.