மாட்ரிட்: ஐரோப்பிய நாடுகளான ஸ்பெயின் மற்றும் போர்ச்சுக்கலில் நேற்று முன்தினம் வரலாறு காணாத வகையில் மின்தடை ஏற்பட்டது. ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட் நகரம் முழுவதும் இருளில் மூழ்கியது. பெரும்பாலான நகரங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதனால் விமானம் மற்றும் ரயில் சேவை, மெட்ரோ ரயில் சேவை, ஏ.டி.எம். உள்ளிட்ட சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதேபோல், போர்ச்சுக்கல் தலைநகர் லிஸ்பன் உள்ளிட்ட நகரங்களும் மின்தடையை சந்தித்தன.

இந்நிலையில், இரு நாடுகளிலும் பெரும்பாலான பகுதிகளில் நேற்று மின்சாரம் மீண்டும் வழங்கப்பட்டது. மாட்ரிட் நகரத்தில் பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள், வணிக வளாகங்கள் மற்றும் சந்தைகள் திறக்கப்பட்டு இயல்பு நிலை திரும்பியது. போர்ச்சுக்கலிலும் 99 சதவீத மின்சாரம் மீட்டெடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மின் தடைக்கு சைபர் தாக்குதல் காரணம் என்ற ஆதாரம் இல்லை என்றும், இது தொழில்நுட்ப கோளாறு அல்லது தீவிர வெப்பநிலை காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என்றும் ஸ்பெயின் மற்றும் போர்ச்சுக்கல் பிரதமர்கள் தெரிவித்தனர். ஸ்பெயினின் மின் விநியோக நிறுவனம் ரெட் எலக்ட்ரிகா, ஐந்து வினாடிகளில் 15 கிகாவாட் மின்சார இழப்பு ஏற்பட்டதே பெரிய பாதிப்பை ஏற்படுத்தியதாக தெரிவித்துள்ளது. தெளிவான காரணம் குறித்து தற்போது தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.