கனேடிய பிரதமராக ஜஸ்டின் ட்ரூடோ கடந்த 9 ஆண்டுகளாக பதவி வகித்து வருகிறார். அங்கு அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் பொதுத் தேர்தலை நடத்துவதற்கான சூழ்நிலை தற்போது நெருக்கடியான நிலையில் உள்ளது.
சமீபகாலமாக, ட்ரூடோவின் மக்கள் ஆதரவு குறைந்து வருகிறது. கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற இடைத்தேர்தலில் ஆளும் லிபரல் கட்சி டொராண்டோவில் ஒரு தொகுதியை இழந்தது.
இந்த நிலையில், காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் இந்தியாவுடன் மோதுவதன் மூலம் தனது பெயரை மீட்டெடுக்க ட்ரூடோ முயற்சித்து வருகிறார். ஆனால் அவரது சொந்த கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு வலுத்து வருகிறது. ட்ரூடோவுக்கு எதிராக 20 எம்.பி.க்கள் போர்க்கொடி தூக்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ட்ரூடோவை பதவி விலகக் கோரி 3 லிபரல் எம்.பி.க்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து முடிவெடுப்பதற்கான முக்கிய கூட்டம் புதன்கிழமை நடைபெறவிருந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும் ட்ரூடோவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால், ட்ரூடோவின் பதவிக்கு எந்த ஆபத்தும் இல்லை என துணைப் பிரதமர் பிரீலாண்ட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.