நியூயார்க்: அமெரிக்க அதிபர் டிரம்ப் திடீரென வெளியிட்ட உத்தரவு, ஹெச்1பி விசா முறையை பயன்படுத்தும் இந்திய தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இனி அமெரிக்க நிறுவனங்கள் ஒரு நபரை ஹெச்1பி விசாவில் வேலைக்கு அமர்த்த ஆண்டுக்கு 1 லட்சம் டாலர் கட்டணம் செலுத்த வேண்டும் என விதி அமலுக்கு வருகிறது.

முன்பு, இந்த விசாவுக்கான கட்டணம் ஆயிரம் டாலர் அளவில் மட்டுமே இருந்தது. புதிய கட்டண உயர்வு செப்டம்பர் 21 முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தற்போது இந்தியாவில் தாயகம் வந்து இருக்கும் ஆயிரக்கணக்கான ஐடி வல்லுநர்கள் குறுகிய காலத்தில் அமெரிக்கா திரும்ப முடியாத சூழ்நிலையை எதிர்கொள்கின்றனர்.
நவராத்திரி, துர்கா பூஜை விடுமுறை காரணமாக இந்தியா வந்திருந்த பலர், உடனடியாக அமெரிக்காவுக்கு திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. டிக்கெட் தேவை அதிகரித்ததால், விமான நிறுவனங்கள் கட்டணத்தை இருமடங்காக உயர்த்தி வசூலித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
டிரம்பின் இந்த புதிய சட்டம், அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பை பாதுகாக்கும் நடவடிக்கையாக கூறப்பட்டாலும், இந்தியர்களுக்கு கடுமையான சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க விமான நிலையங்களிலும் குழப்பம் நிலவி வருகிறது. வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய திட்டமிட்டிருந்த பலர் டிக்கெட்டுகளை ரத்து செய்து கொண்டனர்.