வாஷிங்டனில் இருந்து வந்த தகவலின்படி, அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்1பி விசா கட்டணத்தை 1 லட்சம் டாலராக உயர்த்தியுள்ளார். இது இந்திய மதிப்பில் சுமார் 88 லட்சம் ரூபாய் ஆகும். இந்த புதிய நடைமுறையால், அமெரிக்காவில் வேலைக்கு செல்ல விரும்பும் பல இளைஞர்களின் கனவு சிக்கலில் சிக்கியுள்ளது. எனினும், ஏற்கனவே விசா பெற்றிருப்பவர்களுக்கு இந்த விதி பொருந்தாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

1990ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட எச்1பி விசா, உலகம் முழுவதும் உள்ள திறமையான வல்லுநர்களுக்கு அமெரிக்காவில் வேலை வாய்ப்பை பெற்றுத்தந்தது. பலர் இந்த விசாவை பயன்படுத்தி தங்கள் வாழ்க்கையை உயர்த்திக்கொண்டதோடு, அந்நாட்டில் குடியேறியும் விட்டனர். இந்த விசாவினால் பல்வேறு நிறுவனங்களின் அடித்தளமே அமெரிக்காவில் உருவானது.
கூகுள் நிறுவனத்தின் சுந்தர் பிச்சை, மைக்ரோசாப்ட் தலைவர் சத்யா நாதெள்ளா, GQG பார்ட்னர்ஸ் நிறுவனர் ராஜீவ் ஜெயின், ஆப் டைனமிக் நிறுவனர் ஜோதி பன்சல் போன்றோர் எல்லோரும் எச்1பி விசா பயனாளிகள். அதேபோல், எலான் மஸ்க், Coursera இணை நிறுவனர் ஆண்ட்ரூ என்ஜி, Zoom நிறுவன சிஇஓ எரிக் யுவான், eBay முன்னாள் தலைவர் ஜெப் ஸ்கூல் ஆகியோரும் இந்த விசா வழியே அமெரிக்காவில் அடித்தளம் அமைத்தவர்கள்.
பெப்சி நிறுவன முன்னாள் தலைவர் இந்திரா நூயி, அமெரிக்க அதிபர் டிரம்ப் மனைவி மெலானியா ஆகியோரும் ஒருகாலத்தில் எச்1பி விசா பெற்றவர்கள். இவர்களின் வாழ்க்கைப் பயணம், ஒரு விசா எப்படி உலகளவில் திறமைகளை உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்றது என்பதை வெளிப்படுத்துகிறது. ஆனால், இப்போது கட்டண உயர்வு காரணமாக, அதே பாதையில் செல்ல முயல்கிற புதிய தலைமுறைக்கு மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது.