ஜெருசலேம்: காசா பகுதியில் தொடரும் போருக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டால் மீதமுள்ள அனைத்து பிணைக்கைதிகளையும் விடுவிக்கத் தயாராக இருப்பதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.

பாலஸ்தீனத்தின் காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ், 2023 அக்டோபரில் இஸ்ரேலுக்கு எதிராக தாக்குதல் நடத்தியது. இதில் 1,200 பேர் உயிரிழந்ததுடன், 200 பேர் பிணைக்கைதிகளாக கடத்தப்பட்டனர்.
இதன் பதிலடி நடவடிக்கையாக இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் கடந்த 15 மாதங்களில் காசாவில் 48,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகள் ஆகியவற்றின் முயற்சியால், ஜனவரி 19ஆம் தேதியில் இருந்து 42 நாட்கள் முதல் கட்டமாக போர் நிறுத்த ஒப்பந்தம் அமல் செய்யப்பட்டது.
அந்த காலத்தில் இருதரப்பும் பிணைக்கைதிகளை பரிமாறிக் கொண்டன. கைதிகளில் சிலர் விடுவிக்கப்பட்டனர் மற்றும் உயிரிழந்தவர்களின் உடல்களும் ஒப்படைக்கப்பட்டன. இருப்பினும், இருதரப்பும் ஒப்பந்தத்தை மீறியதாக ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர். இஸ்ரேல், காசா நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் தொடர்ச்சியாக வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், ஹமாஸ் இயக்கத்தின் மூத்த தலைவர் கலீல் அல் ஹயா கூறுகையில், “இஸ்ரேல் அரசியல் ஆதாயங்களுக்காக தற்காலிக போர் நிறுத்தங்களை பயன்படுத்துகிறது. இனி அந்த வகை ஒப்பந்தங்களை ஹமாஸ் ஏற்காது. போர் முற்றிலும் முடிவுக்கு வரும் என்ற நிபந்தனையில் மட்டுமே மீதமுள்ள 59 பிணைக்கைதிகளை விடுவிக்கிறோம்” என்றார்.
இஸ்ரேல் இந்த நிபந்தனையை ஏற்கும் பட்சத்தில், காசாவில் நடைபெறும் போர் விரைவில் முடிவுக்கு வரும் என கூறப்படுகிறது.